தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகம் அமைக்க அனுமதி - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்


தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகம் அமைக்க அனுமதி - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
x
தினத்தந்தி 5 April 2020 4:30 AM IST (Updated: 5 April 2020 12:36 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

தூத்துக்குடி, 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி கோவில்பட்டியில் நடமாடும் காய்கறி வண்டிகள் மூலம் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று, 12 காய்கறிகள் கொண்ட தொகுப்பை ரூ.100-க்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ 4 நடமாடும் காய்கறி வண்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர், பொதுமக்களுக்கு 12 காய்கறிகள் கொண்ட தொகுப்பை ரூ.100-க்கு வழங்கினார்.

இதில் தக்காளி ஒரு கிலோ, பல்லாரி, உருளைக்கிழங்கு அரை கிலோ, கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய் கால் கிலோ, புடலங்காய் 300 கிராம், மிளகாய் 150 கிராம், ஒரு தேங்காய் மற்றும் சிறிதளவு புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவையும் வழங்கப்படுகிறது. தொடர்ந்து கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசார வாகனத்தையும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர், கோவில்பட்டி அம்மா உணவகத்தில் சென்று உணவு சாப்பிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், அங்கு சிறப்பாக பணியாற்றிய பெண் ஊழியர்கள் 12 பேருக்கு தனது சொந்த நிதியில் இருந்து தலா ரூ.1,000 வழங்கினார். அப்போது அம்மா உணவகத்தில் காலை, மதியம் தலா 500 பேருக்கு உணவு தயார் செய்து வழங்குவதாகவும், இரவில் 100 பேருக்கு இட்லி தயார் செய்து வழங்குவதாகவும் தெரிவித்தனர். அவர்களிடம், ஆதரவற்றவர்களுக்கு பணம் வாங்காமல் உணவு வழங்குமாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவுறுத்தினார்.

முன்னதாக தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வருகிற 14-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் தொடர்ந்து ஆய்வு கூட்டங்களை நடத்தி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஊரடங்கு உத்தரவின் போது, மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ரூ.1000 மற்றும் இலவச ரேஷன் பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. வெளிமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களையும் கண்டறிந்து, அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் நடமாடும் காய்கறி தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அவர்களை சென்றடையும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிநாடு சென்று திரும்பியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார்கள். கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகம் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதற்கான மருத்துவ உபகரணங்கள் டெல்லியில் இருந்து அனுப்பி க்கைப்பட்டு உள்ளது. நாளை(அதாவது இன்று) அந்த உபகரணங்கள் பெறப்பட்டு, தூத்துக்குடி மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது.

ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. போலீசாரும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மக்கள் சுய ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். இதில் அரசியல் சார்ந்த அம்சங்களை பார்க்க வேண்டியது இல்லை. இது மனித சமுதாயத்துக்கு ஏற்பட்ட சவாலாகத்தான் பார்க்க வேண்டும். எதிர்க்கட்சிகளும் இதற்கு ஒத்துழைத்து வருகின்றன. பத்திரிகையாளர் அடையாள அட்டை உள்ள அனைவருக்கும் நிவாரண உதவி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, சின்னப்பன் எம்.எல்.ஏ., தாசில்தார் மணிகண்டன், நகரசபை ஆணையாளர் ராஜாராம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அனிதா, சுகாதார அலுவலர் இளங்கோ, அ.தி.மு.க. நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Next Story