3 பேர் டெல்லி சென்று வந்ததால் சத்தியில், 5,150 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்


3 பேர் டெல்லி சென்று வந்ததால் சத்தியில், 5,150 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
x
தினத்தந்தி 5 April 2020 4:30 AM IST (Updated: 5 April 2020 12:55 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலத்தில் இருந்து 3 பேர் டெல்லி சென்று வந்ததால் அந்த பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்து 150 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

சத்தியமங்கலம், 

டெல்லியில் கடந்த மாதம் 22-ந் தேதி மதபிரசங்க கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு சத்தியமங்கலம் பெரிய பள்ளிவாசல் அருகே உள்ள 3 பேர் சென்றுவிட்டு விமானம் மூலம் கோவை வந்தனர். பின்னர் அங்கிருந்து சத்தியமங்கலம் வந்தனர். கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதனால் சத்தியமங்கலத்தை சேர்ந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சுகாதாரத்துறையினர் 3 பேரையும் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு 3 பேரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஆஸ்பத்திரியில் இருக்கும் 3 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் வசித்த இடத்தை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் உள்ள 1,800 வீடுகளிலும் சுகாதார பணியாளர்கள் விசாரணை நடத்தி கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருவாய் தாசில்தார் கணேசன் தலைமையில் நகராட்சி மற்றும் சுகாதார பணியாளர்கள் 1,800 வீடுகளில் வசிக்கும் 5 ஆயிரத்து 400 பேரை தனிமைப்படுத்தப்பட்டவர்களாக அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அந்தந்த வீடுகளில் நோட்டீஸ் ஒட்டும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சம்பந்தப்பட்ட வீடுகளில் குடியிருப்பவர்களின் கைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டவருக்கான சீல் வைத்தும் எச்சரிக்கப்பட்டனர். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும், அவர்களுக்கான காய்கறி, மளிகை பொருட்கள் வீடு தேடி சென்று வழங்கப்படும் என்றும் வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். இதையொட்டி போலீசார் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story