தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு போதிய ஆய்வகங்கள் அமைக்க வேண்டும் - கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு போதிய ஆய்வகங்களை அமைக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி. வலியுறுத்தினார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டு, தனிமைப்படுத்தப்பட்ட வார்டு ஆகியவற்றை கனிமொழி எம்.பி. நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர், அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் கமலவாசனிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது அரசு ஆஸ்பத்திரிக்கு தேவையான எந்த உதவிகளையும் செய்து தர தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை போதுமான அளவு செய்யப்படவில்லை என்ற கருத்து நிலவுகிறது. இதனை அரசு முக்கியமாக கருத்தில் கொண்டு, போதிய ஆய்வகங்களை அமைத்து, பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்த வேண்டும்.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவர்கள் தயாராக இருப்பது மகிழ்ச்சி தருகிறது. இதேபோன்று அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் மருத்துவர்கள் பாதுகாப்பாக பணியாற்றுவதற்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை போதுமான அளவு அரசு வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.
அப்போது தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story