கும்மிடிப்பூண்டி அருகே, டாஸ்மாக் கடை சுவரில் துளைபோட்டு ரூ.20 ஆயிரம் மதுபாட்டில்கள் திருட்டு - அண்ணன், தம்பி கைது


கும்மிடிப்பூண்டி அருகே, டாஸ்மாக் கடை சுவரில் துளைபோட்டு ரூ.20 ஆயிரம் மதுபாட்டில்கள் திருட்டு - அண்ணன், தம்பி கைது
x
தினத்தந்தி 4 April 2020 10:30 PM GMT (Updated: 4 April 2020 7:46 PM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவரில் துளைபோட்டு உள்ளே புகுந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 2 பெட்டி மதுபாட்டில்களை திருடிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த காயலார்மேடு கிராமத்துக்கும், நாகராஜகண்டிகை கிராமத்துக்கும் இடையே அரசு டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த டாஸ்மாக் கடையின் பின்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த 2 பேர், சுவரில் கடப்பாரையால் துளைபோட்டு கடைக்குள் புகுந்தனர்.

பின்னர் டாஸ்மாக் கடையில் விற்பனைக்கு வைத்து இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 2 மதுபான பெட்டிகளை மட்டும் திருடிவிட்டு, அதை தங்களது மோட்டார் சைக்கிளில் வைத்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றனர்.

ஆள்நடமாட்டம் இல்லாத அந்த பகுதியில் திடீரென சலசலப்பு சத்தம் கேட்டதால் கிராம பொதுமக்களில் சிலர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது டாஸ்மாக் கடை சுவரில் துளைபோட்டு மதுபாட்டில்களை திருடிச்செல்ல முயன்ற 2 பேரையும் மடக்கிப்பிடித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் பெரியஓபுளாபுரம் கிராமத்தை சேர்ந்த கார் டிரைவரான ரமேஷ் (வயது 40) மற்றும் அவருடைய தம்பியான தனியார் நிறுவன ஊழியர் வெற்றிவேல் (34) என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்கள் என்று கூறப்படுகிறது.

தற்போது கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளதால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. இதனால் கடந்த சில நாட்களாக மது குடிக்க முடியாமல் மிகுந்த மனஉளைச்சலில் இருந்த இருவரும் எப்படியும் குடித்தே ஆக வேண்டும் என்ற உந்துதலில் டாஸ்மாக் கடை சுவரில் துளைபோட்டு அங்கிருந்த மதுபாட்டில்களை திருடியதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில் களை திருடிய அண்ணன், தம்பியை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story