அவினாசியில் ஒரே நாளில் 3,240 வீடுகளில் மருத்துவ பரிசோதனை


அவினாசியில் ஒரே நாளில் 3,240 வீடுகளில் மருத்துவ பரிசோதனை
x
தினத்தந்தி 5 April 2020 4:30 AM IST (Updated: 5 April 2020 1:38 AM IST)
t-max-icont-min-icon

அவினாசியில் நேற்று ஒரே நாளில் 3,240 வீடுகளில் சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

அவினாசி, 

கொரோனா வைரஸ் தாக்குதல் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் துரித நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதில் சுகாதாரத்துறையினர் அவினாசி நகரில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வட்டார மருத்துவ அலுவலர்கள், சக்திவேல், ரேவதி, தனலட்சுமி, யசோதா, விஜயசுந்தரம், மோகன்ராஜ், சந்திரன், கபில் ஆகியோர் தலைமையில் சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் ரமேஷ், பரமன், செந்தில்குமார், கோவிந்தராஜ், அவினாசி பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி ஆகியோரின் கீழ் சுகாதார செவிலியர்கள் கொண்ட 60 குழுக்கள் அமைத்து சுகாதார ஆய்வு உபகரணங்களுடன் வீடுகள்தோறும் சென்று ஆய்வு செய்தனர். அப்போது வீடுகளில் உள்ள கர்ப்பிணிகள், முதியோர், குழந்தைகள் உள்ளிட்டோருக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.

மேலும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சளி, தொடர் இருமல், தொண்டை வலி இருக்கிறதா என்று பரிசோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கு முன் குடும்பத்தினர் யாராவது வெளிநாடு, வெளிமாநிலம், வெளியூர் சென்றுவந்தார்களா என்றும் அல்லது வெளிமாவட்டம், வெளியூரிலிருந்து வீடுகளுக்கு உறவினர்கள், நண்பர்கள் வந்தார்களா என்று விசாரித்து வருகின்றனர். 

மிக அவசியமின்றி யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும், உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று குடும்பத்திருக்கு அறிவுறுத்தினர். நேற்று அவினாசியில் 3,240 வீடுகளில் சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். இன்றும்(ஞாயிறு) அந்தப் பணி தொடர உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Next Story