கீழக்கரை, சாயல்குடி பகுதிகளில் விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு சீல்


கீழக்கரை, சாயல்குடி பகுதிகளில் விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு சீல்
x
தினத்தந்தி 4 April 2020 10:45 PM GMT (Updated: 4 April 2020 9:21 PM GMT)

விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்து அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.

கீழக்கரை, 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக தமிழக அரசு பல்வேறு முறைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கீழக்கரையில் உள்ள அனைத்து வீதிகளிலும் மாவட்ட துணை கலெக்டர் சுகபுத்ரன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் கீழக்கரை இந்து பஜாரில் அமைந்துள்ள மளிகை மற்றும் அரிசி கடைகள் விதிமுறைகளை பின்பற்றாததால் அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.

இதில் கீழக்கரை தாசில்தார் வீரராஜா, தூய்மை பணி ஆய்வாளர் பூபதி, மேற்பார்வையாளர் சக்தி மற்றும் நகராட்சி ஊழியர்கள் உடன் இருந்தனர்.

பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சமூக இடைவெளிவிட்டு நிற்க வேண்டும், அவர்கள் கை கழுவுவதற்கு ஏற்றவாறு தண்ணீர், சோப்பு ஆகியவற்றை கடை வாசல் முன்பு வைக்க வேண்டும். இந்த விதிமுறைகளை மீறும் கடைகளை மூடி சீல் வைக்குமாறு துணை கலெக்டர், தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.

சாயல்குடி அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே தனியாருக்கு சொந்தமான விடுதி உள்ளது. அரசு அனுமதியின்றி தகுந்த பராமரிப்பு இல்லாமல் செயல்பட்டு வந்தது. மேலும் இந்த விடுதியின் பின்புறம் உள்ள சிலாப்புகள் அனைத்தும் மிகவும் சேதமடைந்து அடிக்கடி இடிந்து விழுந்ததால் அருகில் வசிக்கும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். 

இதனையறிந்த கமுதி தாசில்தார் முத்துக்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் சேகர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பூமிநாதன், இளநிலை உதவியாளர் முத்துராமலிங்கம், சாயல்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த விடுதி அரசின் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருவதும், அருகில் வசிக்கும் மக்களுக்கு பொது சுகாதாரக்கேட்டை விளைவிக்கும் வகையில் இருப்பதும், ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தொழிலாளர்களை வைத்து கட்டுமான பணிகளை மேற்கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த விடுதியை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

Next Story