இன்று முதல் வீடு, வீடாக கொரோனா தொற்று ஆய்வு - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 90 நாட்களுக்கு அனைத்து வீடுகளிலும் ஆய்வு செய்யப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை தேனாம்பேட்டையில் நவீன எந்திரம் மற்றும் ‘ஜெட்ராடிங்’ எந்திரம் கொண்டு கிருமி நாசினி தெளிக்கும் பணியை ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சி துறைகளின் சார்பில் கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் ரிப்பன் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நகர்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் 24 மணி நேரம் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் ‘வாட்ஸ் அப்’ குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நோய் தடுப்பு நடவடிக்கைகள்
சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்த நபர் கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். நோய் உறுதி செய்யப்பட்டவர் வீட்டினை தடுப்பு வளைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
500 வீடுகள் ஒரு சிறு வட்டமாக பிரிக்கப்பட்டு ஒரு வட்டத்துக்கு ஒரு பணியாளர் வீதம் மற்றும் சுகாதாரத்துறை மற்றும் மருத்துவசார் பணியாளர்கள் தினந்தோறும் வீடு வீடாக சென்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
நோய்தடுப்பு நடவடிக்கைக் காக 11.50 லட்சம் முக கவசங் கள் கொள்முதல் செய்ய பணி ஆனை வழங்கப்பட்டு, தற்போது 4 லட்சம் முகக்கவசங் கள் வழங்கப்பட்டுள்ளது. டாக் டர்களுக்கு ஆயிரம் முககவசங் கள் வழங்கப்பட உள்ளது.
6 லட்சம் துணியால் ஆன கையுறைகள் கொள்முதல் செய்ய பணி ஆணை வழங்கப்பட்டு, 14 ஆயிரத்து 700 கை உறைகள் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
2 ஆயிரம் லிட்டர் கை சுத்திகரிப்பான்கள், 50 ஆயிரம் லிட்டர் கிருமி நாசினி, 395 கையினால் தெளிக்கக்கூடிய விசை தெளிப்பான்கள், 59 வாகனங்களில் பொருத்தக் கூடிய கிருமிநாசினி தெளிப்பான்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் செயல்பட்டு வருகின்றன.
90 நாட்கள் ஆய்வு
ஊரடங்கு காலமான நாட்களில் 407 அம்மா உணவகங்களின் உணவு வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி காப்பகங்களில் இதுவரை 4 ஆயிரத்து 738 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் அனைத்து வீடுகளிலும் தினசரி பொது மக்களுக்கு காய்ச்சல், இருமல் இருக்கிறதா என ஆய்வு செய்யப்பட்டு சிகிச்சை அளிக்க மாநகராட்சியால் திட்டம் தயாரிக்கப்பட்டு சென்னை முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த பணியினை செய்ய 16 ஆயிரம் ஊழியர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த ஊழியர்கள் 75 முதல் 100 வீடுகளை இன்று முதல் தினந்தோறும் தொடர்ந்து 90 நாட்கள் ஆய்வு செய்து, தினமும் அதற்குண்டான பதிவுகளை உரிய முறையில் மேற்கொள்வார்கள்.
இதன் மூலம் பொது மக்களின் ஆரோக்கியம் 24 மணி நேரமும் கண்காணிக்கபடும். இந்த களப்பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு, உரிய பயிற்சி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதோடு மட்டுமல்லாமல், ரூ.15 ஆயிரம் மதிப்பூதியம் வழங்கப்படும்.
இதேபோல் நகராட்சிகளில் அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளிலும், பேரூராட்சி இயக்ககத்தின் சார்பிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பிலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்ககத்தின் சார்பிலும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் ஆய்வுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்த் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story