கடைகளை திறந்து மதுபாட்டில்களை கடத்தினர்: டாஸ்மாக் அதிகாரிகள்-ஊழியர்கள் அதிரடி கைது


கடைகளை திறந்து மதுபாட்டில்களை கடத்தினர்: டாஸ்மாக் அதிகாரிகள்-ஊழியர்கள் அதிரடி கைது
x
தினத்தந்தி 5 April 2020 4:30 AM IST (Updated: 5 April 2020 4:25 AM IST)
t-max-icont-min-icon

சட்டவிரோதமாக டாஸ்மாக் கடைகளை திறந்து மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற டாஸ்மாக் அதிகாரி மற்றும் ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேரையூர்,

பேரையூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மதியழகன் மற்றும் போலீசார் அத்திப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடையில் இருந்து 3 பேர் வந்தனர்.

போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்களிடம் 19 மதுபாட்டில்கள் இருந்தன.

விசாரணையில் அவர்கள் அந்த டாஸ்மாக் கடையில் வேலை பார்க்கும் விற்பனையாளர் அக்கினி, மேற்பார்வையாளர் கந்தவேல் மற்றும் பேரையூர் டாஸ்மாக் கடையில் வேலை பார்க்கும் தர்மர் என்பது தெரிய வந்தது. அவர்கள் சட்ட விரோதமாக தடையை மீறி டாஸ்மாக் கடைகளை திறந்து மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்றது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூரில் மறைவான ஒரு இடத்தில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதில் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் ஜெயபால் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ஜெயபால் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

டாஸ்மாக் கடை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளே டாஸ்மாக் கடையை திறந்து சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story