நிறுவனங்கள் தரும் அடையாள அட்டையை ஏற்று பணியாளர்களை அனுமதிக்க வேண்டும் - தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை


நிறுவனங்கள் தரும் அடையாள அட்டையை ஏற்று பணியாளர்களை அனுமதிக்க வேண்டும் - தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 5 April 2020 4:45 AM IST (Updated: 5 April 2020 4:38 AM IST)
t-max-icont-min-icon

அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நிறுவனங்கள் தரும் அடையாள அட்டைகளை ஏற்று கொண்டு பணியாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

மதுரை,

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு ஒன்று அனுப்பப்பட்டு உள்ளது. இது குறித்து முதுநிலை தலைவர் ரத்தினவேல் கூறியதாவது:-

தமிழக அரசு பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனை வரவேற்கிறோம். உணவு பொருட்கள் உற்பத்தி செய்யவும், அதனை லாரிகள் மூலம் எடுத்து செல்லவும், விற்பனை செய்யவும் அனுமதி தந்துள்ளது. அதில் உள்ள சில இடர்பாடுகளை களைந்தால் தான் மக்களுக்கு முழு அளவில் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும்.

உணவு பொருட்கள் உற்பத்திக்கும், விற்பனைக்கும் ஆட்கள் வேலைக்கு வர வேண்டும். தற்போது அந்த பணியாளர்களுக்கு சிவில் சப்ளை துறை மூலம் அனுமதி தரப்படுகிறது. ஆனால் இந்த அனுமதி பெறுவதற்கு கால தாமதம் ஏற்படுகிறது. 10 பேருக்கு விண்ணப்பித்தால் 5 பேருக்கு தான் அனுமதி தரப்படுகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும்.

உணவு பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்கள் பணியாளர்களுக்கு தரும் அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதத்தை அரசு ஏற்று கொண்டு அவர்கள் பணிக்கு வருவதை அனுமதிக்க வேண்டும். அந்த அடையாள அட்டையில் ஊழியர்களின் புகைப்படம், ஜி.எஸ்.டி.எண் அல்லது எப்.எஸ்.எஸ்.எ.ஐ. நம்பர், முகவரி ஆகியவை இடம் பெற்று இருக்கும். இந்த அடையாள அட்டையுடன் பணியாளர்கள் பணிக்கு வந்தால் அவர்களை அனுமதிக்க வேண்டும். பணியாளர்கள் பணிக்கு வந்தால் அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்கும். இந்த கோரிக்கையை அரசு உடனடியாக பரிசீலித்து அனுமதி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story