குட்டி தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை: கொரோனாவின் கோரப்பிடியில் தாராவி - மேலும் 2 பேருக்கு பாதிப்பு


குட்டி தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை: கொரோனாவின் கோரப்பிடியில் தாராவி - மேலும்  2 பேருக்கு பாதிப்பு
x
தினத்தந்தி 4 April 2020 11:10 PM GMT (Updated: 4 April 2020 11:10 PM GMT)

மும்பை தாராவி கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கிறது. இங்கு மேலும் 2 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

மும்பை, 

நாட்டிலேயே கொரோனா பாதிப்பில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளது. இந்த மாநில தலைநகரான மும்பையில் உள்ள தாராவி ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக விளங்குகிறது. தாராவியில் வெறும் 600 ஏக்கர் பரப்பளவில் சுமார் 15 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு தமிழர்கள் அதிகம் வசிப்பதால் ‘குட்டி தமிழ்நாடு’ என தாராவி அழைக்கப்படுவது உண்டு.

நெருக்கடி மிகுந்த வீடுகளில் மக்கள் வசித்து வரும் தாராவியை கொரோனா தாக்கினால், இந்த குடிசைப்பகுதி தாங்காது என ஆய்வுகள் கூறின.

ஆனால் தாராவிக்குள் தாவாமல் இருந்த கொரோனா கடந்த 1-ந் தேதி அங்குள்ள பாலிகாநகரை சேர்ந்த 56 வயது துணிக்கடைக்காரரை தாக்கியது மருத்துவ பரிசோதனையில் உறுதியானது. அன்று இரவே அவர் உயிரிழந்தார். டெல்லி மத மாநாட்டில் பங்கேற்று விட்டு மும்பை வந்த கேரளாவை சேர்ந்த சிலருக்கு தனது காலியான வீட்டில் அடைக்கலம் கொடுத்த நிலையில், இவர் கொரோனாவின் கோரப்பசிக்கு பலியாகி இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்தநிலையில் தாராவி மெயின் ரோட்டில் உள்ள வைபவ் கட்டிடத்தில் வசித்து வந்த டாக்டர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் துணிக்கடைக்காரர் மற்றும் டாக்டர் வசித்து வந்த கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர்.

இதுதவிர டாக்டர், துணிக்கடைக்காரருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி உள்ளனர்.

மேலும் தாராவியில் வேலை செய்த ஒர்லியை சேர்ந்த மாநகராட்சி துப்புரவு தொழிலாளியையும் கொரோனா தாக்கியது.

இந்தநிலையில் தாராவியில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஒருவர் பாலிகா நகரை சேர்ந்த 30 வயது பெண் ஆவார். மற்றொருவர் தாராவி முகுந்த் நகரை சேர்ந்த 48 வயது நபர் ஆவார்.

இதன் மூலம் இதுவரை தாராவியல் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகி உள்ளார். 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது இந்த குடிசைப்பகுதி மக்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் தாராவியை போலீசார் சீல் வைத்து மக்கள் நடமாட்டத்தை தடுத்து வருகின்றனர். இதனால் தாராவி மக்கள் தங்களது மிகச்சிறிய குடிசை வீடுகளுக்குள் முடங்கி கிடக்கிறார்கள்.

Next Story