கர்நாடகத்தில் இந்திரா உணவகங்களில் இலவச உணவு நிறுத்தம் - எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கண்டனம்
கர்நாடகத்தில் இந்திரா உணவகங்களில் இலவச உணவு வினியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்த போது மாநிலம் முழுவதும் இந்திரா மலிவு விலை உணவகம் திறக்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருப்பதால், ஆதரவற்ேறார் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்திரா உணவகங்களில் வழங்கப்படும் இலவச உணவு திட்டத்தில் முறைகேடு நடப்பதாகவும், எனவே இலவச உணவு வழங்கப்படாது என்றும் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பசித்தவர்களுக்கு உணவு வழங்க வேண்டியது அரசின் முன்னுரிமையாக இருக்க வேண்டும். கூலித்தொழிலாளர்கள், வெளிமாநில தொழிலாளர்கள், ஏழைகள், பசியால் வாடக்கூடாது என்ற காரணத்தினால், நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, மலிவு விலையில் உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திரா உணவகங்களை தொடங்கினோம்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கர்நாடகம் உள்பட நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் தொழிலாளர்களுக்கு உணவு வழங்க இந்திரா உணவகங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உழைக்க வாய்ப்பு இல்லாமல், கையில் பணம் இல்லாமல் தொழிலாளர்கள், வெளிமாநில தொழிலாளர்கள், ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த கடினமான நேரத்தில் இலவசமாக உணவு வழங்கும் முடிவை மாநில அரசு ரத்து செய்துள்ளது. அந்த உணவுக்கு விலையை நிர்ணயம் செய்துள்ளது மிக மோசமானது.
தவறு நடப்பதாக இருந்தால் அதை தடுப்பதை விட்டுவிட்டு, இலவசமாக உணவு வழங்குவதை நிறுத்துவது என்பது சரியல்ல. அதனால் மாநில அரசு, கர்நாடகத்தில் உள்ள அனைத்து இந்திரா உணவகங்களிலும் தொழிலாளர்களுக்கு ஊரடங்கு உத்தரவு வாபஸ் ஆகும் வரை இலவசமாக உணவு வழங்க வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா குறிப்பட்டு உள்ளார்.
Related Tags :
Next Story