ரேஷன் அட்டை இல்லாத வெளிமாநிலத்தினருக்கும் உணவு தானியங்கள் -முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
கர்நாடகத்தில் ரேஷன் அட்டை இல்லாத வெளிமாநிலத்தினருக்கும் உணவு தானியங்கள் வழங்கப்படும் என்றும், மாநிலத்தில் தேவையான அளவுக்கு அத்தியாவசிய பொருட்கள் இருப்பு இருப்பதாகவும் முதல்-மந்திரி எடியூரப்பா ெதரிவித்து உள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் இதுவரை 124-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரசுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 4 பேர் இந்நோய் தாக்கி பலியாகியுள்ளனர். இந்த நிலையில் பெங்களூருவில் கொரோனாவை தடுப்பது குறித்து பெங்களூரு நகர எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடன் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதில் மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர், வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார், கூட்டுறவுத்துறை மந்திரி எஸ்.டி.சோமசேகர், நகர வளர்ச்சித்துறை மந்திரி பைரதி பசவராஜ், மேயர் கவுதம்குமார், எம்.பி.க்கள் பி.சி.மோகன், தேஜஸ்வி சூர்யா மற்றும் அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெங்களூருவில் கொரோனாவை தடுப்பது குறித்து பெங்களூருவை சேர்ந்த மந்திரிகள் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மேயருடன் ஆலோசனை நடத்தினேன். கொரோனாவை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு விளக்கி கூறினேன். கொரோனா தடுப்பு தொடர்பாக 17 அவசர கால போர் அலுவலகங்கள் திறக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன.
உணவு தானியங்கள், மருந்துகள், சர்க்கரை, சமையல் எண்ணெய் போன்றவை தேவையான அளவுக்கு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. 480 ஹாப்காம்ஸ் கடைகளில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. நடமாடும் கடைகளும் செயல்படுகின்றன. பெங்களூருவில் 31 காய்ச்சல் மருத்துவ மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
இலவச பால்
விக்டோரியா, பவுரிங், பெங்களூரு மருத்துவ கல்லூரிகளில் 650 படுக்கைகள் கொரோனாவுக்கு அமைக்கப்பட்டு உள்ளன. 36 தனியார் நிறுவனங்களுக்கு, சானிடைசர் திரவம் தயாரிக்க அனுமதி வழங்கியுள்ளோம். 10 பரிசோதனை மையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. கூலித்தொழிலாளர்களுக்கு உணவு, தங்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 40 லட்சம் குடிசை வாழ் மக்களுக்கு இலவச பால் வழங்குகிறோம். கட்டிட தொழிலாளர்கள், வெளிமாநில கூலித்தொழிலாளர்களுக்கும் இலவச பால் வழங்கு கிறோம்.
ஊரடங்கு உத்தரவு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் 500 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 15 லட்சம் கட்டிட தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ.1,000 வரவு வைத்துள்ளோம். அடுத்த ஓரிரு நாளில் மேலும் ரூ.1,000 வழங்க இருக்கிறோம். அத்தியாவசிய பொருட்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. பொதுமக்கள் 2 நாட்களுக்கு தேவையான அளவுக்கு மட்டும் பொருட்களை வாங்கினால் போதும்.
கர்நாடகத்தில் கொரோனா நோயாளிகள் யாரும் செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் இல்லை. 2 பேர் மட்டும் ஆக்சிஜன் பிராண வாயு உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கர்நாடகத்தில் இதுவரை 124 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 4 பேர் மரணம் அடைந்து உள்ளனர். 11 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கேபினட் மந்திரி தலைமையில் ஒரு செயல்படை அமைக்கப்பட்டு உள்ளது. தலைமை செயலாளர் தலைமையில் 17 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெங்களூருவில் கொரோனா தடுப்பு போர் அலுவலகம் திறந்துள்ளோம். சமூக விலகலை பின்பற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பெங்களூரு மாநகராட்சி சார்பில் வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
கொரோனாவை தடுக்க அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்தேன். ரேஷன் அட்டை இல்லாத வெளிமாநிலங்களை சேர்ந்த கூலித்தொழிலாளர்களுக்கு உணவு தானியங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் உணவு தானியம் வழங்கப்படும்.
கொரோனா தவிர பிற பிரச்சினைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பதாக புகார் வந்துள்ளது. சிகிச்சை அளிக்க மறுப்பது சரியல்ல. தனியார் மருத்துவமனைகள் பிற நோயாளி களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் தேவையான அளவுக்கு கையிருப்பு உள்ளது. அதனால் பொதுமக்கள் யாரும் ஆதங்கப்பட தேவை இல்லை.
அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்வதில் உள்ள பிரச்சினைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கு உத்தரவு தீவிரமாக அமல்படுத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது. ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்.
இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள், அரசின் நடவடிக்கையை பாராட்டினர். பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கி கணக்கில் வருகிற 10-ந் தேதிக்குள் ரூ.2,000 வரவு வைக்கப்படும். இந்திரா உணவகங்களில் இலவச உணவு வழங்குவதை நிறுத்திவிட்டோம். அதில் சில தவறுகள் நடப்பதாக புகார்கள் வந்ததை அடுத்து இந்த முடிவு எடுத்துள்ளோம். அங்கு ரூ.10, ரூ.5-க்கு உணவுகள் தொடர்ந்து வழங்கப்படும்.
பாதுகாப்பு கவச உடைகள்
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களுக்காக 9.80 லட்சம் பாதுகாப்பு கவச உடைகள் கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளோம். இதில் இதுவரை 1.43 லட்சம் கவச உடைகள் வந்துள்ளன. 18.33 லட்சம் என்.95 முக கவசங்கள் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளோம். இதில் இதுவரை 4.13 லட்சம் முக கவசங்கள் வந்துள்ளன.
1,570 செயற்கை சுவாச கருவிகள் கொள்முதலுக்கு ஆர்டர் கொடுத்துள்ளோம். இதில் இதுவரை 17 கருவிகள் வந்துள்ளன. பெங்களூருவில் கொரோனா பரவுவது கட்டுப்படுத்தப்பட வேண்டும். இதற்கு அனைவரின் ஒத்துழைப்பு அவசியம். வருகிற 14-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என்பது எனது ஆசை. என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Related Tags :
Next Story