திருச்சி மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - கலெக்டர் பேட்டி


திருச்சி மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - கலெக்டர் பேட்டி
x
தினத்தந்தி 4 April 2020 11:00 PM GMT (Updated: 5 April 2020 3:12 AM GMT)

திருச்சி மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் சிவராசு கூறினார். திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-

திருச்சி,

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாவட்டத்தில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 3,045 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அனைவரும் நல்ல நிலையில் உள்ளனர். திருச்சி அரசு மருத்துவமனையில் 125 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் ஈரோடு, கரூர், தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 120 பேர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதில் 117 பேர் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள்.

120 பேரின் இருப்பிடங்களை சுற்றியுள்ள 50 பகுதிகளில் இதுவரை 25 ஆயிரத்து 586 குடியிருப்புகளில் 469 மருத்துவக்குழுவினர் வீடு, வீடாக ஆய்வு செய்து 1 லட்சத்து 13 ஆயிரத்து 947 பேரை பரிசோதனை செய்துள்ளனர். இதில் எந்த நபருக்கும் கொரோனா வைரஸ் நோய் அறிகுறி இல்லை. ஏற்கனவே கொரோனா வைரஸ் நோய் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேருக்கும் உறுதி செய்யப்பட்டு, 3 பேரும் சிகிசசை பெற்று வருகிறார்கள். அவர்களுடைய உடல்நிலை சீராக உள்ளது.

இதுவரை 221 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 3 பேரை தவிர, 218 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் இல்லை என ரத்த மாதிரியில் தெரியவந்துள்ளது. தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள 120 பேருக்கும் ரத்த மாதி பரிசோதனை முடிவு வர வேண்டும். இவர்களில் 53 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் ரத்த மாதிரி பரிசோதனை அறிக்கை முடிவு வந்துள்ளது.

அதில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. 36 பேருக்கு வைரஸ் தொற்று இல்லை என அறிக்கை வந்துள்ளது. இருப்பினும் இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் மேலும் 14 நாட்கள் சிகிச்சை பெற்று இறுதியாக பரிசோதனை செய்தபின்னர், மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். மேற்கண்ட 53 பேரை தவிர மீதமுள்ள 67 பேரின் பரிசோதனை நடவடிக்கையில் உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக சிகிச்சை பெற தனியார் மருத்துவமனைகளான எஸ்.ஆர்.எம். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இருங்களூர், ஜீ.வி.என். மருத்துவமனை திருச்சி, சிந்துஜா மருத்துவமனை மணப்பாறை, மாருதி மருத்துவமனை தென்னூர், காவேரி மெடிக்கல் சென்டர் மருத்துவமனை தென்னூர் ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுகொள்ள அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருமணம், இறப்பு, மருத்துவம் ஆகிய தகுந்த காரணங்களை கொண்டு வந்த 234 பேருக்கு வெளிமாவட்டங்களுக்கு செல்ல அனுமதி பாஸ் வழங்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்திலும் முதல்-அமைச்சர் அறிவுத்துள்ளபடி காய்கறி மற்றும் மளிகை கடைகள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story