மாவட்ட செய்திகள்

தமிழகத்தில், கொரோனாவால் பாதித்த மேலும் 2 பேர் சாவு - பலி எண்ணிக்கை 3 ஆனது + "||" + In Tamil Nadu, influenced by Corona 2 more dead - The number of casualties was 3

தமிழகத்தில், கொரோனாவால் பாதித்த மேலும் 2 பேர் சாவு - பலி எண்ணிக்கை 3 ஆனது

தமிழகத்தில், கொரோனாவால் பாதித்த மேலும் 2 பேர் சாவு - பலி எண்ணிக்கை 3 ஆனது
தமிழகத்தில் கொரோனாவால் பாதித்த மேலும் 2 பேர் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரம், 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இந்த வைரஸ் தொற்றினால் 400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் டெல்லி நிஜாமுதீனில் கடந்த மாதம் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பியுள்ளவர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு தீவிரப்படுத்தியது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் யார், யாரெல்லாம் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்துள்ளனர் என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களை கண்டறிந்து அரசு மருத்துவமனையின் தனி வார்டுகளில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்களின் விவரம் சேகரிக்கப்பட்டது. இதில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 74 பேர் கண்டறியப்பட்டு அவர்கள் விழுப்புரம் நகரில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையிலும், முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தனி வார்டிலும் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களை 24 மணி நேரமும் மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்ததோடு அவர்களது ரத்த மாதிரிகளை பரிசோதனைக்காக, சென்னை கிண்டியில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதில் விழுப்புரம் முத்தோப்பு அகரம்பாட்டையை சேர்ந்த ஒருவர், கமலா நகரை சேர்ந்த ஒருவர், திடீர்குப்பம் வாசு நகரை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த 30-ந் தேதியன்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சிலரின் மருத்துவ பரிசோதனை முடிவு கிடைக்கப்பெற்றது.

இந்த மருத்துவ பரி சோதனை முடிவில் விழுப்புரம் சிங்காரதோப்பு பகுதியை சேர்ந்த ஒருவருக்கும், விழுப்புரம் மாசிலாமணிபேட்டை, வண்டிமேடு, விராட்டிக்குப்பம் பாதை, விக்கிரவாண்டி, வளவனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா ஒருவருக்கும் என 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்கள் 9 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சத்தான உணவு வழங்கப்பட்டதோடு மருத்துவ குழுவினர், 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்தனர்.

இந்த நிலையில் இவர்கள் 9 பேரில் விழுப்புரம் சிங்காரதோப்பு பகுதியை சேர்ந்த 51 வயதான அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவரை டாக்டர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து உரிய சிகிச்சை அளித்தனர். இருப்பினும் மூச்சுத்திணறல் அதிகமாகி நேற்று காலை 7.45 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இவர் டெல்லி மாநாட்டில் பங்கேற்று விட்டு கடந்த 24-ந் தேதியன்று விழுப்புரம் வந்துள்ளதும், அதன் பிறகு ஒரு வாரத்தில் இவரை கண்டறிந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை செய்யப்பட்டதும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் திடீரென இறந்ததும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து இவருடைய உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதையில் உள்ள கபர்ஸ்தானுக்கு (முஸ்லிம்களை நல்லடக்கம் செய்யும் இடம்) கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் அங்கு அவரது உடல், அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கொரோனா தனி வார்டில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் ஒருவரும் பலியாகி உள்ளார். அது பற்றிய விவரம் வருமாறு:-

சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் சிதம்பரம் அருகே மருதூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த 33 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், கடந்த 1-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

மேலும் அந்த வாலிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என்று கண்டறிய ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு, அதனை பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அதன் முடிவு வரவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென அந்த வாலிபர் இறந்தார். மருத்துவமனைக்கு வரும் போது அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததால், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டதாகவும், பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். இருப்பினும் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட ரத்த மாதிரி முடிவு வந்தால்தான், அவர் கொரோனாவால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் நோயால் இறந்தாரா? என்பது பற்றி தெரியும். கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 35 வயது பெண்ணும் திடீரென இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய தேனி மாவட்டத்தை சேர்ந்த 21 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் போடியை சேர்ந்த 56 வயது நபரும் அடங்குவார். இதையடுத்து கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 21 பேரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட போடியை சேர்ந்தவரின் மனைவி (வயது 53) கடந்த சில தினங்களாக தொடர் காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் அவதியடைந்து வந்தார். இவர் டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் அவரது கணவர் டெல்லி சென்று திரும்பியதால் இவருக்கும் அந்த பாதிப்பு இருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உறவினர்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போடி வந்த சுகாதாரத்துறையினர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை மருத்துவக்குழுவினர் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தனர். அவருக்கு காய்ச்சல் அதிகமாக இருந்தது. இதனால் அந்த பெண்ணுக்கு டாக்டர்கள் சுவாசக்கருவிகள் பொருத்தி தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.

இதன்மூலம் தேனி மாவட்டத்தில் கொரோனா வைரசுக்கு அந்த பெண் முதல் பலியாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே உயிரிழந்துள்ள நிலையில், நேற்று தமிழகத்தில் 2-வது நபராக விழுப்புரத்தை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் இறந்தார். இந்த நிலையில் 3-வது நபராக தேனி பெண்ணும் பலியாகி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நான் பிழைப்பேன் என நினைக்கவில்லை; கொரோனாவில் இருந்து தப்பிய 106 வயது முதியவர் பேட்டி
நான் பிழைப்பேன் என நினைக்கவில்லை என்று கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த 106 வயது முதியவர் பேட்டியில் கூறியுள்ளார்.
2. திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உயர்வு
திருவண்ணாமலை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்று உயர்வடைந்து உள்ளது.
3. கொரோனா பாதிப்பு எதிரொலி; விருதுநகர் மாவட்டத்தில் நாளை முதல் பட்டாசு ஆலைகள் மூடல்
விருதுநகர் மாவட்டத்தில் நாளை முதல் பட்டாசு ஆலைகளை மூட பட்டாசு உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
4. கேரளாவில் 272 பேருக்கு கொரோனா பாதிப்பு; முதல் மந்திரி அறிவிப்பு
கேரளாவில் 272 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
5. கொரோனா பாதிப்பு; மும்பையில் இதுவரை 15 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்
மராட்டியத்தின் மும்பை நகரில் இதுவரை 15 லட்சம் பேர் கொரோனா பாதிப்புக்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என மாநகராட்சி அறிவித்துள்ளது.