போதைக்காக குளிர்பானத்தில் சேவிங் லோசனை கலந்து குடித்த மேலும் ஒருவர் சாவு
மதுபோதைக்காக குளிர்பானத்தில் சேவிங் லோசனை கலந்து குடித்த மேலும் ஒருவர் இறந்தார்.
கோட்டைப்பட்டினம்,
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் பஷீர் மகன் அன்வர் ராஜா (வயது 33). இவரது நண்பர்கள் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த முகமது மைதீன் மகன் அசன் மைதீன் (35), ராமநாதபுரத்தை சேர்ந்த மலைக்கண்ணன் மகன் அருண்பாண்டி (27). இதில் அசன் மைதீனும், அருண்பாண்டியும் கோட்டைப்பட்டினத்தில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தனர். அன்வர்ராஜா பழைய இருசக்கர வாகனங்களை வாங்கி, விற்பனை செய்து வந்தார்.
ஊரடங்கு உத்தரவையொட்டி டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் 3 பேரும் போதைக்காக சேவிங் லோசனை (விஷம்) குளிர்பானத்தில் கலந்து குடித்து உள்ளனர். பின்னர் அன்வர் ராஜா அவரது வீட்டிற்கு சென்று விட்டார். அசன் மைதீனும், அருண் பாண்டி ஆகியோரும் வீட்டிற்கு சென்று விட்டனர். பின்னர் இவர்கள் 2 பேரும் வாந்தி எடுத்து உள்ளனர். இதையடுத்து அருகில் உள்ளவர்கள் இவர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் நாங்கள் மது போதைக்காக சேவிங் லோசனை குடித்து விட்டோம் என்று கூறினர்.
இதையடுத்து அவர்கள் கோட்டைப்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த கோட்டைப்பட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவராமன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் 2 பேரையும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே அன்வர்ராஜா வீட்டிற்கு சென்று அவரையும் மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருண்பாண்டி, அசன் மைதீனும் பரிதாபமாக இறந்தனர்.
அன்வர் ராஜாவை மேல் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அன்வர்ராஜா மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அன்வர்ராஜாவை பரிசோதித்த டாக்டர்கள் அன்வர்ராஜா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கோட்டைப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story