கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை - கலெக்டர் ராமன் எச்சரிக்கை


கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை - கலெக்டர் ராமன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 5 April 2020 3:45 AM IST (Updated: 5 April 2020 8:42 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் குறித்து ஆய்வு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சேலம்,

கெங்கவல்லி தாலுகாவிற்குட்பட்ட தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கொட்டையம்பள்ளி, நாகியம்பட்டி, ஜெ.சமூத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து ஒவ்வொரு வீடாக சென்று பொதுமக்களிடம் சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளதா? என்பது குறித்து விவரங்கள் சேகரிக்கும் ஆய்வுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியை கலெக்டர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சிக்குட்பட்ட 19 வார்டுகள், சேலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சன்னியாசிகுண்டு, களரம்பட்டி, எருமாபாளையம் மற்றும் தாரமங்கலம், மேட்டூர், சேலம் கேம்ப், கெங்கவல்லி, தம்மம்பட்டி ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படாமல் கட்டுப்படுத்தும் விதமாக 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு வரையறுக்கப்பட்டு உள்ளது. இங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

அதன்படி வீடுகள் தோறும் நேரில் சென்று ஆய்வு நடத்தி பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளதா? என்பது குறித்து விவரங்கள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதே போன்று அனைத்து வீடுகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அதன்படி தாரமங்கலம் பகுதியில் 11 ஆயிரம் வீடுகளில், 44 ஆயிரம் பேர்களிடமும், மேட்டூர் சேலம் கேம்ப் பகுதியில் 11 ஆயிரத்து 300 வீடுகளில் 48 ஆயிரம் பேர்களிடதும் ஏற்கனவே விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது.

இதே போல கெங்கவல்லி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 11 ஆயிரத்து 340 வீடுகளில் 50 ஆயிரம் பேரிடமும் நேரில் சென்று ஆய்வு நடத்தி சளி, காய்ச்சல், முச்சுத்திணறல் இருக்கிறதா? என்பது குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு வரப்படுகிறது. கொரோனா வைரஸ் குறித்து ஆய்வுப்பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக வாழப்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட வெள்ளாளகுண்டம் இந்திரா நகர் பகுதியில் விவசாயத்திற்கு பயன்படும் கருவிகள் செய்யும் தொழில் மற்றும் டைல்ஸ் பதிக்கும் தொழிலில் ஈடுபட்டு வரும் மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த 30 பேருக்கு சமையலுக்கு தேவையான அரிசி, பருப்பு, மைதா, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட மளிகை பொருட்களை கலெக்டர் ராமன் வழங்கினார்.

மேலும் வாழப்பாடி வைத்தி படையாட்சி தெரு, கெங்கவல்லி, தம்மம்பட்டி, உடையார்பாளையம், குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடும்ப அட்டை தாரர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று கொரோனா வைரஸ் நிவாரணத்தொகை ரூ.1000 மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான பொருட்கள் பெறுவதற்கான டோக்கன்களையும் வழங்கினார். கொரோனா வைரஸ் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வீடுகள் தோறும் சென்று பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், சப்-கலெக்டர்கள் மாறன், துரை, போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜூ, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் நிர்மல்சன், தாசில்தார்கள் ஜானகி, சிவக்கொழுந்து உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story