ஊரடங்கு உத்தரவில் இருந்து சரக்கு வாகனங்களுக்கு விலக்கு - கலெக்டர் மெகராஜ் தகவல்


ஊரடங்கு உத்தரவில் இருந்து சரக்கு வாகனங்களுக்கு விலக்கு - கலெக்டர் மெகராஜ் தகவல்
x
தினத்தந்தி 5 April 2020 3:30 AM IST (Updated: 5 April 2020 8:42 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவில் இருந்து அனைத்து சரக்கு வாகனங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதால், டிரைவர்கள் அச்சம் இன்றி வாகனங்களை இயக்க முன்வர வேண்டும் என கலெக்டர் மெகராஜ் கூறினார்.

நாமக்கல்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில் சரக்கு வாகன போக்குவரத்திற்காக அரசு எடுத்து உள்ள நடவடிக்கைகள் குறித்து லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களுக்கான விளக்க கூட்டம் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கி பேசியதாவது:-

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, மளிகை பொருட்கள், காய்கறிகள், மருந்து பொருட்கள் கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது அனைத்து பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களுக்கும் ஊரடங்கு உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 33 ஆயிரம் சரக்கு வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களில் டிரைவர்கள், உதவியாளர்கள் என 66 ஆயிரம் பேர் பணியில் உள்ளனர். இந்த வாகனங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பல்வேறு பொருட்களை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

ஊரடங்கு உத்தரவினால் வெளிமாநிலங்களில் உள்ள சரக்கு வாகன டிரைவர் மற்றும் உதவியாளர்களுக்கு அசோக் லைலேண்ட் பணிமனைகள் மற்றும் பல்வேறு ஆயில் நிறுவனங்களின் எரிபொருள் நிரப்பும் மையங்கள் மூலமாக உணவு மற்றும் தங்கும் வசதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சரக்கு வாகனங்களை இயக்குவதற்கு டிரைவர்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து பணிக்கு வருவதற்காக, அவர்களுக்கு அனுமதி அட்டைகள் வழங்குவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. எனவே பணிக்கு வரும் டிரைவர்கள் அனுமதி அட்டைகள் பெற ஓட்டுநர்கள் சங்கம் அல்லது சரக்கு வாகன உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றின் மூலமாக விண்ணப்பித்து அனுமதி பெற்று கொள்ளலாம். இதனால் டிரைவர்கள் தேவையற்ற அச்சம் கொள்ளாமல் தங்கள் பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ரவிச்சந்திரன், இளமுருகன், முருகன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story