திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் நிலை நன்றாக உள்ளது - கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் நிலை நன்றாக உள்ளது என்று கலெக்டர் கந்தசாமி கூறினார். திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா வைரஸ் தொடர்பான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்கள், அத்தியாவசியப் பொருட்கள், உணவு உள்பட அனைத்து தேவைகளுக்கும் தொடர்பு கொள்ளலாம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் கட்டமாக திருவண்ணாமலை நகராட்சி, கொம்மநந்தல், களம்பூர், மங்கலம் ஆகிய சுகாதார வட்டங்களில் 60 தன்னார்வ தனியார் நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் பொது கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இவர்கள் அந்த பகுதியில் தினந்தோறும் வீடு, வீடாக சென்று ஆய்வு பணிகள் மேற்கொள்வார்கள்.
வருகிற 6-ந் தேதி (நாளை) பங்குனி உத்திரத்தன்று பொதுமக்கள் யாரும் கோவிலுக்கு செல்ல வேண்டாம். கிராமப்புறங்களில் கோவில்களில் கூட்டம் சேராமல் இருக்க அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி செயலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கண்காணிக்க அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரசால் 6 பேர் பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவ மருத்துவமனையில் அனுமதிப்பட்டு உள்ளனர். இவர்களது உடல் நிலை நன்றாக உள்ளது. சிலர் மன உளைச்சலில் உள்ளனர். அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு மன தைரியத்தை ஏற்படுத்தி வருகின்றோம்.
டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் 51 பேர் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வந்தவாசியை சேர்ந்த 3 பேர் அவர்களாகவே முன்வந்து தகவல் தெரிவித்து உள்ளனர். கொரோனா வைரஸ் அறிகுறியால் திருவண்ணாமலை மற்றும் செய்யாறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்கள் தற்போது செய்யாறு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள தரை தள அறைகளிலும், திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவார்கள்.
ஊரடங்கு உத்தரவு கிராமபுறங்களில் ஓரளவிற்கு கடைபிடித்து வருகின்றனர். நகரப்புறங்களில் மக்கள் நடமாட்டம் இருப்பது தெரியவந்து உள்ளது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story