ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை மையம் - அடுத்தவாரம் பயன்பாட்டுக்கு வருகிறது
ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க முதல்- அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான பணிகள் முடிவடைந்து அடுத்தவாரம் பயன்பாட்டுக்கு வருகிறது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கொரோனா அறிகுறியுடன் வருபவர்களுக்கு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தொற்று நோய் பிரிவு வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களது ரத்தம், சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கிருந்து பரிசோதனை முடிவுகள் வருவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
இதனால் கொரோனா அறிகுறியுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க காலதாமதம் ஏற்பட்டது. எனவே ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் மையம் அமைக்க வேண்டும் என்று குமரி மாவட்ட மக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரத்திடம் கோரிக்கை வைத்தனர்.
குமரி மாவட்ட மக்களின் கோரிக்கையை, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு, தளவாய்சுந்தரம் கொண்டு சென்றார். இந்த கோரிக்கையை ஏற்று, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்அடிப்படையில், ஆஸ்பத்திரிக்கு கொரோனா மற்றும் பிற வைரஸ் நோய்களை கண்டறியக்கூடிய ‘வைராலஜி பரிசோதனை மையம்’ அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதனை தமிழக சுகாதார பணிகள் இணை இயக்குனர் மதுசூதனன், ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி டீன் சுகந்தி ராஜகுமாரி ஆகியோர் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் உதவி உறைவிட மருத்துவர் விஜயலட்சுமி, பேராசிரியர் சுபா, செய்தி- மக்கள் தொடர்புத்துறை ஓய்வு பெற்ற கூடுதல் இயக்குனர் தாணப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பாக ஆஸ்பத்திரி டீன் சுகந்தி ராஜகுமாரி கூறுகையில், ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்று கண்டறிய மருத்துவ பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரத்துக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பரிசோதனை மையத்துக்கு தேவையான ரூ.25 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் டெல்லியில் இருந்து நாகர்கோவிலுக்கு நாளை (அதாவது இன்று) வருகிறது. பரிசோதனை மையம் அடுத்த வாரம் முதல் செயல்படும். இந்த பரிசோதனை மையம் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள பல்வகை மருத்துவத்துறை கட்டிடத்தில், நுண்ணுயிரியல் துறை பிரிவில் தொடங்க இருக்கிறது. மேலும் 300 படுக்கை வசதிகள் கொண்ட தனிமைபடுத்தப்பட்ட வார்டும் தயார் நிலையில் உள்ளது. அதில் 50 படுக்கைகள் தீவிர சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறினார்.
Related Tags :
Next Story