குமரியில் பாதிப்பு எண்ணிக்கை 6 ஆனது 88 வயது மூதாட்டிக்கு கொரோனா - ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை


குமரியில் பாதிப்பு எண்ணிக்கை 6 ஆனது 88 வயது மூதாட்டிக்கு கொரோனா - ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை
x
தினத்தந்தி 5 April 2020 3:45 AM IST (Updated: 5 April 2020 9:30 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் 88 வயது மூதாட்டிக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆனது. எனவே குமரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாகர்கோவில்,

சீனாவில் உருவெடுத்த கொரோனா வைரஸ் இன்று உலகையே மிரட்டி வருகிறது. இந்தியாவில் இந்த வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 400-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து குமரி மாவட்டம் திரும்பியவர்கள் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தினமும் கண்காணித்து வருகிறார்கள். இவர்களில் 28 நாட்கள் தனிமைப்படுத்துதல் முடிந்தவர்களுக்கு வெளியில் செல்வதற்கான தடை அகற்றப்பட்டது. அவ்வாறு பலர் தடை நீங்கி வழக்கமான வாழ்க்கை முறைக்கு திரும்பியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் டெல்லியில் நடந்த மாநாடு ஒன்றில் பங்கேற்று திரும்பிய குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் தோப்பு, நாகர்கோவில் டென்னிசன் தெரு, வெள்ளாடிச்சிவிளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 4 பேருக்கும், சென்னை விமான நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்த மணிக்கட்டிபொட்டல் அனந்தசாமிபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி சிறப்பு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் உள்ள தனித்தனி அறைகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது வீடுகள் அனைத்திலும் சிவப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த 5 பேரின் வீடுகள் அமைந்துள்ள பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி ஒவ்வொன்றிலும் தலா 1000 வீடுகள் வீதம் சுமார் 5 ஆயிரம் வீடுகளைச் சேர்ந்தவர்கள் அந்தந்த பகுதியில் இருந்து வெளியே செல்லவோ, வெளியில் உள்ளவர்கள் அந்த பகுதிக்குச் செல்லவோ அனுமதி இல்லை. தொற்றுள்ளவர்கள் வீடுகளிலும், தடை விதிக்கப்பட்ட பகுதிகளிலும் தினமும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள், அவர்களுடன் தொடர்பு கொண்டவர்கள் பட்டியலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தயாரித்து, வழித்தட வரைபடத்தையும் வெளியிட்டனர். சுகாதாரத்துறையினர் தயாரித்த பட்டியலில் 165 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்களுடைய வீடுகளும் அந்தந்த பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இங்குள்ள வீடுகளில் சிவப்பு குறியீடு கொண்ட பச்சை நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. 165 பேரின் குடும்பத்தினரும் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இவர்களும் தினமும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

இதற்கிடையே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மணிக்கட்டிபொட்டல் அனந்தசாமிபுரத்தைச் சேர்ந்த சென்னை விமான நிலைய ஊழியரின் உறவினர்கள் உள்பட 4 பேரும், நாகர்கோவில் டென்னிசன் தெருவைச் சேர்ந்தவரின் தம்பி, பாட்டி (88 வயது மூதாட்டி) ஆகியோருக்கு சந்தேகத்தின்பேரில் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி தொற்றுநோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் இந்த 6 பேர் உள்பட 8 பேரின் சளி மற்றும் ரத்தம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நெல்லையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதில் 88 வயது மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரானா வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்களுக்கு கொரானா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது. மூதாட்டியுடன் சேர்த்து குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 6 ஆனது.

இந்த நிலையில் நேற்று நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு வாலிபருக்கு கடுமையான சளி மற்றும் காய்ச்சல் போன்ற கொரோனா அறிகுறிகள் இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மாநகராட்சிக்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து நகர்நல அதிகாரி கின்சால் உத்தரவின் பேரில் வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள நகர்நல மைய டாக்டர் மற்றும் நர்சுகள் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று வாலிபரை பரிசோதனை செய்தனர்.

ஆனால் அவருக்கு நேற்று கொரோனா நோய்த்தொற்று போன்ற அறிகுறி எதுவும் இல்லை. இந்த நோயின் தாக்கம் சில நாட்கள் கழித்துதான் தெரிய வரும் என்பதால் அவரை குறிப்பிட்ட நாட்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story