பனப்பாக்கம் அருகே, தினமும் சுருண்டு விழுந்து இறக்கும் காகங்கள் - பொதுமக்கள் பீதி
பனப்பாக்கம் அருகே தினமும் இறக்கும் காகங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். பசியால் இறக்கிறதா? அல்லது நோய் தாக்கமா? என்ற காரணம் தெரியாமல் அவர்கள் குழம்பி வருகின்றனர்.
பனப்பாக்கம்,
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்த பன்னியூர் கிராமத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 1-ந் தேதி மாலை 5 மணியளவில் அப்பகுதியில் உள்ள குளத்துமேடு பகுதியில் திடீரென 10-க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்தன. இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பொதுமக்கள் யாரும் வெளியே வராத காரணத்தால் காகங்கள் உணவின்றி இறந்து கிடக்கலாம் என்று சாதாரணமாக நினைத்தனர்.
காகங்கள் இறந்தது பற்றி பொதுமக்கள் பெரியதாக நினைக்கவில்லை. இந்த நிலையில் அதற்கு அடுத்தநாள் அன்று மாலையும் அதே கிராமத்தில் உள்ள பொதுமக்கள் வசிக்கும் வீடுகளின் மேல் வந்து சோர்வாக அமர்ந்த காகங்கள் திடீரென ஒன்றன்பின் சுமார் 10 காகங்கள் சுருண்டு விழுந்து உயிரிழந்தன. காகங்கள் திடீரென இறந்ததை பார்த்த பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையும் பன்னியூர் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் வசிக்கும் வீடுகளில் மேல் மிகவும் சோர்வாக வந்து அமர்ந்த காகங்கள் சிறிது நேரத்தில் மயங்கி ஒன்றன்பின் ஒன்றாக சுருண்டு விழுந்து உயிர் இழந்தன. இதை நேரில் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இதுகுறித்து அப்பகுதியில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் தற்போது கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காரணத்தால் இறந்த காகங்களை பள்ளம் தோண்டி புதைத்து விட்டு அதன்மேல் பிளிச்சிங் பவுடரை போடுமாறு அறிவுறுத்தினர். அதன்பேரில் பொதுமக்கள் இறந்த காகங்களை அதேபகுதியில் பள்ளம் தோண்டி புதைத்தனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் நோய் தொற்று ஏற்படும் என்று பொதுமக்கள் யாருமே வெளியே வராமல் உள்ளனர். இந்த நிலையில் இப்பகுதியில் தொடர்ந்து 3 நாட்களாக காகங்கள் இறப்பது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த காகங்கள் பசியால் இறந்ததா? அல்லது ஏதாவது நோய் தொற்று காரணமாக இறந்ததா? என பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
Related Tags :
Next Story