ஊரடங்கு உத்தரவால் மதுக்கடைகள் மூடல்: வனப்பகுதியில் சாராயம் காய்ச்சிய மர்ம நபர்கள் - பானைகளை அடித்து உடைத்து போலீசார் அழித்தனர்
ஊரடங்கு உத்தரவால் மதுக்கடைகள் மூடப்பட்டதின் காரணமாக வனப்பகுதியில் மர்ம நபர்கள் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தனர். போலீசார் அங்கு சென்று பானைகளை அடித்து உடைத்து அழித்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் காரணமாக தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள சில கிராமங்களில் தொழிலாளர்கள் பலரும் தினமும் மதுக்குடிக்கும் பழக்கம் உடையவர்களாக உள்ளனர். மதுக்கடைகள் மூடப்பட்டதின் காரணமாக அவர்கள் செய்வதறியாமல் திகைத்து போய் விட்டனர்.
இதனால் அவர்களுக்காக தேவர்பெட்டா கிராமத்தைச் சேர்ந்த மர்ம நபர்கள் அங்குள்ள வனப்பகுதியில் பானைகளில் ஊறல்கள் போட்டு சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தனர். இதனால் மதுபிரியர்கள் அங்கு சென்று சாராயம் வாங்கி குடித்து வந்தனர். மேலும் அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஒரே இடத்தில் அமர்ந்து சாராயம் குடித்து வந்தனர். இதுகுறித்து தளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா தலைமையில், தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜ் மற்றும் போலீசார் நேற்று தேவர்பெட்டா வனப்பகுதிக்கு சென்றனர். போலீசார் வருவதை பார்த்த சாராய வியாபாரி ரகு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதைத் தொடர்ந்து அவர் வனப்பகுதியில் போட்டு வைத்திருந்த சாராய ஊறல்கள் மற்றும் பானைகளை போலீசார் உடைத்து அழித்தனர்.
மேலும் 10 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராய வியாபாரி ரகுவை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story