சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு பொருட்கள் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி


சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு பொருட்கள் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி
x
தினத்தந்தி 5 April 2020 10:54 AM IST (Updated: 5 April 2020 10:54 AM IST)
t-max-icont-min-icon

சமூக இடைவெளியை கடைபிடிக்கும் பொதுமக்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாநகராட்சி பூமார்க்கெட் அருகே செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அம்மா உணவகத்தில் உணவு தயாரிக்கும் முறை, பொதுமக்களுக்கு வினியோகிக்கும் முறை ஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டார்.

மேலும் அங்கு தயாரிக்கப்பட்ட உணவை, அதிகாரிகளுடன் சேர்ந்து அமைச்சரும் சாப்பிட்டார். அதையடுத்து திண்டுக்கல் பஸ் நிலையத்தில் சலுகை விலையில் 39 வகையான மளிகை பொருட்கள், 13 வகையான காய்கறிகள் தொகுப்பு வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். ஏழை மக்களின் நலனுக்காக அம்மா உணவகத்தில் மிகக்குறைந்த விலையில் 3 வேளையும் உணவு வழங்கப்படுகிறது. மேலும் காய்கறிகள், மளிகை பொருட்களின் விலையேற்றத்தை கட்டுக்குள் வைக்கும் பொருட்டு ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான 39 வகையான மளிகை பொருட்கள், 13 வகையான காய்கறி தொகுப்புகளை வழங்கும் சிறப்பு திட்டம் தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதில் மளிகை தொகுப்பில் 5 கிலோ அரிசி, 2½ கிலோ இட்லி அரிசி, துவரம் பருப்பு 500 கிராம், உளுந்தம் பருப்பு 500 கிராம், பாசிப்பருப்பு 100 கிராம், புளி 125 கிராம், கோதுமை 500 கிராம், மஞ்சள் தூள் 50 கிராம், சர்க்கரை 500 கிராம், கிருமிநாசினி சோப்பு 1, நெய் 50 மில்லி, டீத்தூள் 25 கிராம் உள்ளிட்ட 39 பொருட்கள் இடம்பெறும். இதன் மதிப்பு ரூ.2 ஆயிரம் ஆகும்.மேலும் மளிகை பொருட்களை பாதி அளவில் ரூ.1,000-த்துக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் தக்காளி, வெங்காயம், உருளை உள்ளிட்ட 13 வகை காய்கறி தொகுப்பும் ரூ.100-க்கு வழங் கப்படும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்தே 9944068076 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் தொடர்புகொண்டு இந்த தொகுப்புகளை பெறலாம். அத்துடன் நடமாடும் காய்கறி கடைகள் மூலமும் தங்களுக்கு தேவையான காய்கறிகளை பெறலாம்.

அப்போது சமூக இடைவெளியை கடைபிடித்ததற்காக பொதுமக்களுக்கு டோக் கன்கள் வழங்கப்படும். பின்னர் இந்த டோக்கன்கள் அனைத்திற்கும் குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும். அதன்படி முதல் பரிசாக குளிர்சாதன பெட்டியும், இரண்டாம் பரிசாக 2 நபர்களுக்கு பீரோவும், 3-ம் பரிசாக 3 நபர்களுக்கு குக்கரும், சிறப்பு பரிசாக 108 பேருக்கு சேலையும் வழங்கப்படும்.

கடந்த மாதம் 30-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தின் போது திண்டுக்கல் மாவட்டத்தில் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதன் பின்னர் டெல்லி மாநாட்டுக்கு சென்றுவிட்டு திண்டுக்கல் வந்த முஸ்லிம்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து திண்டுக்கல் வந்தவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம், மாநகராட்சி ஆணையாளர் செந்தில்முருகன், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் முருகேசன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் இருந்தனர்.

Next Story