சிதம்பரம் மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் சாவு
சிதம்பரம் மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் உயிரிழந்தார்.
அண்ணாமலைநகர்,
சிதம்பரம் அருகே உள்ள மருதூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த 33 வயதுடைய வாலிபருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, கடந்த 1-ந்தேதி சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். இதையடுத்து அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில், அவரை கொரோனா வார்டில் அனுமதித்து டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வந்தனர். அவரது ரத்த மாதிரியும் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அவர் சிகிச்சை பலனளிக்காமல் திடீரென உயிரிழந்தார்.
இதுகுறித்து டாக்டர்கள் தரப்பில் கூறுகையில், இறந்தவர் ஏற்கனவே தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழ்நிலையில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால், கொரோனா பாதிப்பு இருக்குமோ? என்கிற நிலையில் தான் கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அவர் இறந்துவிட்டார். அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்த பின்னரே அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததா என்பது உறுதி செய்ய முடியும் என்று தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் சிதம்பரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 35 வயது பெண் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரி பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
Related Tags :
Next Story