டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பியவர்களில் மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதி - விருத்தாசலம், வடலூரை சேர்ந்தவர்கள்


டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பியவர்களில் மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதி - விருத்தாசலம், வடலூரை சேர்ந்தவர்கள்
x
தினத்தந்தி 5 April 2020 10:54 AM IST (Updated: 5 April 2020 10:54 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பியவர்களில் மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் விருத்தாசலம், வடலூரை சேர்ந்தவர்கள் என்று கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.

கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நேற்று மாலை அவரது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே பரங்கிப்பேட்டை, பண்ருட்டியை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா உறுதியானது. இன்று (நேற்று ) மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் விருத்தாசலத்தை சேர்ந்த 4 பேர், வடலூரை சேர்ந்த ஒருவர் ஆவர்.

இதன் மூலம் மாவட்டத்தில் இது வரை 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 86 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அதில் இன்று (நேற்று ) 21 பேரின் ரத்த பரிசோதனை முடிவுகள் வந்துள்ளது. அதில் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே 17 பேரின் பரிசோதனை முடிவில் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது.

இன்னும் 48 பேரின் பரிசோதனை முடிவுகள் 2 நாட்களில் வரும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது மாவட்டத்தில் 63 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. அவர்கள் வசிக்கும் வீடுகளில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரம் உள்ள பகுதிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

50 வீடுகளுக்கு ஒரு கிராம சுகாதார செவிலியர், அங்கன்வாடி பணியாளர்களை நியமித்து உள்ளோம். அவர்களுடன் ஒரு டாக்டரும் கண்காணிப்பு பணியில் உள்ளார். அவர்கள் அந்த பகுதிகளில் வீடு, வீடாக சென்று யாருக்காவது கொரோனா அறிகுறி உள்ளதா? என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள சாலைகள், கட்டிடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வராதபடி அவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் மளிகை, காய்கறி பொருட்கள் வழங்கி வருகிறோம்.

அரசு அறிவித்த நலத்திட்ட உதவிகள் அவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். ஊரடங்கு உத்தரவை மேலும் கடுமையாக்கி உள்ளோம். வருகிற 14-ந்தேதி வரை இறைச்சி கடைகளை மூட உத்தரவிட்டுள்ளோம். அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணியை அதிகப்படுத்தி இருக்கிறோம். ஆதரவற்றவர்கள், திருநங்கைகள், ரேஷன் கார்டுகள் இல்லாதவர்களுக்கு உணவு வழங்கி வருகிறோம்.

வரக்கூடிய காலம் மிக முக்கியமானது. வருகிற 14-ந்தேதி வரை சோதனை காலம் என்று கூறலாம். இந்த காலத்தில் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவை. ஆகவே வீட்டில் இருந்தே பொருட்களை வாங்குங்கள். சில இடங்களில் இளைஞர்கள் தேவையில்லாமல் மோட்டார் சைக்கிள்களில் சுற்றி வருகிறார்கள். அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். ஊரடங்கு உத்தரவை மீறியதாகவும், நோய் தொற்று பரவ காரணமாக இருந்ததாகவும் அவர்கள் மீது வழக்கு தொடரப்படும். நீங்கள் வைரஸ் தொற்று பரவ காரணமாக இருந்து விடக்கூடாது. இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்ட பரங்கிப்பேட்டை, பண்ருட்டி, விருத்தாசலம், வடலூர் பகுதிகளை சேர்ந்த 8 பேரும் டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை மருத்துவ படிப்பு படித்து வரும் மாணவர் ஒருவர் கடந்த 23-ந்தேதி சிதம்பரத்தில் இருந்து அவரது சொந்த ஊரான கோவைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதி செய்துள்ளனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆகவே அவருடன் பழகிய நபர்களை கண்டறிந்து, அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வரப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.

பேட்டியின் போது மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு, டாக்டர் பரிமேலழகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story