வாகன போக்குவரத்து முடங்கியதால் திருவாரூரில், மளிகை பொருட்கள் விலை அதிகரிப்பு


வாகன போக்குவரத்து முடங்கியதால் திருவாரூரில், மளிகை பொருட்கள் விலை அதிகரிப்பு
x
தினத்தந்தி 5 April 2020 5:25 AM GMT (Updated: 5 April 2020 5:25 AM GMT)

வாகன போக்குவரத்து முடங்கி உள்ளதால் திருவாரூரில், மளிகை பொருட்கள் விலை அதிகரித்துள்ளது.

திருவாரூர்,

கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.

கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பொதுமக்களை அரசு அறிவுறுத்தி வருகிறது. ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் மருந்து, மளிகை, காய்கறி கடைகள் மட்டுமே குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளன. கடைகளில் சமூக இடைவெளி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகளுக்கு தேவையான பொருட்கள் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லாரிகளில் கொண்டு வரப்படுவது வழக்கம். ஊரடங்கு காரணமாக வாகன போக்குவரத்து முடங்கி உள்ளது.

சரக்கு வாகன போக்குவரத்தும் பல்வேறு காரணங்களால் ஸ்தம்பித்து வருகிறது. இதனால் மளிகை பொருட்கள் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. மிளகாய் வற்றல் முன்பு கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது அதன் விலை ரூ.200-ஐ தாண்டி உள்ளது.

இதேபோல் வெள்ளை உளுந்து விலை ரூ.110-ல் இருந்து ரூ.160 ஆக அதிகரித்துள்ளது. கருப்பு உளுந்து ரூ.83-ல் இருந்து ரூ.120 ஆகி விட்டது. மேலும் பல்வேறு பொருட்களின் விலை சராசரியாக 25 சதவீதம் வரை உயர்ந்து விட்டது.

வெல்லம், பிஸ்கட், டீத்தூள் உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. ரூ.18-க்கு விற்கப்பட்ட தேங்காய் தற்போது ரூ.25-க்கும், ரூ.3-க்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை ரூ.5-க்கும் விற்பனையாகி வருகிறது.

மளிகை பொருட்களின் விலை ஏற்றம் அடைந்துள்ளதால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சரக்கு வாகன போக்குவரத்தை சீராக்கி அத்தியாவசிய மளிகை பொருட்களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story