கோவை ஆஸ்பத்திரிகளில் கொரோனா தொற்று சந்தேகத்துடன் பெண் டாக்டர் உள்பட மேலும் 27 பேர் அனுமதி


கோவை ஆஸ்பத்திரிகளில் கொரோனா தொற்று சந்தேகத்துடன் பெண் டாக்டர் உள்பட மேலும் 27 பேர் அனுமதி
x
தினத்தந்தி 5 April 2020 5:25 AM GMT (Updated: 5 April 2020 5:25 AM GMT)

கொரோனா தொற்று சந்தேகத்துடன் பெண் டாக்டர் உள்பட 27 பேர் கோவை ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கொரோனா தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை.

கோவை,

கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி மற்றும் மேட்டுப்பாளையம், அன்னூர் அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுதவிர கொரோனா சந்தேகம் உள்ளவர்கள் சில தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களின் ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு கொரோனா தொற்று உறுதியான பின்னர் அவர்கள் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் பெண் டாக்டர் உள்பட 27 பேர் கொரோனா சந்தேகத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை ஆஸ்பத்திரிகளில் நேற்றைய நிலவரப்படி அனுமதிக்கப்பட்டவர்கள் விவரம் வருமாறு:-

கோவை இ.எஸ்.ஐ, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்கள்-125

தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்கள்-10 பேர்

மொத்தம்-135 பேர் (ஆண்கள்-111, ஆண் குழந்தை-3, பெண்கள்-20, பெண் குழந்தை-1)

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் (பாசிட்டிவ்)-34 பேர்

கொரோனா தொற்று உறுதி செய்யப்படாதவர்கள் (நெகடிவ்)-34 பேர்

பரிசோதனை முடிவு காத்திருப்பவர்கள்-43 பேர்

ரத்த மாதிரிக்கு அனுப்பப்பட்டவர்கள்-24 பேர்.

இந்த நிலையில் மேலும் ஒரு பெண் டாக்டருக்கு கொரோனா தொற்று சந்தேகத்துடன் நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அந்த டாக்டர் சிதம்பரத்தில் பணியாற்றி வந்துள்ளார். அவர் ஊரடங்கு பிறப்பித்த பின்னர் தான் கோவைக்கு திரும்பியுள்ளார். அப்போது அவர் கொரோனா தொற்று சந்தேகத்துடன் கோவையில் உள்ள தனியார் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருடைய ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அதன் முடிவுகள் இன்னும் வரவில்லை.

கடந்த 5 நாட்களுக்கு முன்பு வரை அவர் சிதம்பரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். அதன்பின்னர் அவர் கோவை வந்துள்ளார். எனவே அவருக்கு எப்படி கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் ஏற்பட்டது என்று தெரியவில்லை. இதுகுறித்து விசாரித்து வருவதாகவும், அவருடைய ரத்த மாதிரி பரிசோதனைகளின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story