வேலூர் மாவட்டத்தில் காய்கறிகள், மளிகை பொருட்கள் போதுமான அளவு இருப்பு உள்ளது - கலெக்டர் தகவல்
வேலூர் மாவட்டத்தில் காய்கறிகள், மளிகை பொருட்கள் போதுமான அளவு இருப்பு உள்ளது என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேலூர்,
கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதே வேளையில் மக்களின் அடிப்படை தேவையான உணவுப்பொருட்கள் தங்கு தடையில்லாமல் கிடைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதுமான அளவு காய்கறிகள் கிடைக்க மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் காய்கறி சந்தைகள் அமைக்கப்பட்டு சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் மற்ற அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் மளிகை பொருட்களின் இருப்பு உறுதி செய்திட மொத்த வியாபாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அதில், பருப்பு, நவதானியங்கள், எண்ணெய் மற்றும் இதர மளிகை பொருட்கள் ஆகியவை அடுத்த 3 மாதத்துக்கு தேவைக்கு அதிகமாக இருப்பு உள்ளது. மேலும் ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மத்தியபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து தொடர்ந்து தங்கு தடையின்றி வந்து கொண்டிருக்கிறது.
காய்கறிகளை பொறுத்தவரை அவை 3 நாட்களுக்கு மேல் கெட்டுப்போகும் நிலை உள்ளதால் அனைத்து மொத்த மற்றும் சில்லரை விற்பனை கடைகளிலும் குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு தேவையான இருப்பு உள்ளது. மேலும் காய்கறிகளில் பெரும்பான்மையானவை வேலூர் மாவட்டத்திலேயே விளைவிக்கப்படுவதால் தொடர்ந்து அவை விவசாயிகளிடமிருந்து வந்து கொண்டிருக்கின்றன. தற்போது வேலூர் மாவட்டத்தை மட்டுமின்றி பிற மாவட்டங்களிலும் தேவைக்கு அதிகமாகவே அனைத்து பொருட்களும் தொடர்ந்து கிடைத்து வருவதால் மக்கள் பதற்றப்படாமல் அவற்றை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு வாங்கும் போது காய்கறிகள் குறைந்த பட்சம் 3 நாட்களுக்கு தேவையானவற்றையும், மளிகை பொருட்களை குறைந்தபட்சம் 7 நாட்கள் முதல் 10 நாட்கள் வரையும் வாங்கி இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். தினசரி காய்கறி கடைகளுக்கும், மளிகை கடைகளுக்கும் செல்வதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
அத்தியாவசிய பொருட்களை தடையில்லாமல் எடுத்து செல்ல வாகனங்களுக்கு அந்தந்த தாசில்தார்களால் பாஸ் வழங்கப்படுகிறது. இதனை முறையாக பயன்படுத்தி அத்தியாவசிய தேவைகளான காய்கறிகள், அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் மளிகை பொருட்களை வியாபாரிகள் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ளாமல் தங்களது தேவைக்கேற்ப உணவுப் பொருட்களை வாங்கவும், சமூக விலகலை முழுமையாக கடைபிடித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story