நெல்லை மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரிகளில் மருத்துவ சேவையை தடையின்றி வழங்க வேண்டும் - கலெக்டர் ஷில்பா அறிவுறுத்தல்


நெல்லை மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரிகளில் மருத்துவ சேவையை தடையின்றி வழங்க வேண்டும் - கலெக்டர் ஷில்பா அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 6 April 2020 4:15 AM IST (Updated: 5 April 2020 11:24 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் தனியார் ஆஸ்பத்திரிகளில் மருத்துவ சேவைகளை தடையின்றி வழங்க வேண்டும் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

நெல்லை, 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களும் உடனுக்குடன் கிடைத்திட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் ஆஸ்பத்திரிகளும் அவசர மற்றும் தொடர் மருத்துவ சேவை அளிப்பதற்காக தொடர்ந்து இயங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் மகப்பேறு மருத்துவம், டயாலிசிஸ், புற்றுநோய் மருத்துவ சிகிச்சை, அவசர சிகிச்சை போன்ற மருத்துவ சேவைகளை தடையின்றியும், பாதிப்பின்றியும் செயல்படுத்திட இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உட்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதியுடன் ஆய்வு மேற்கொண்டு, அவர்களது முகவரி, தொலைபேசி எண், அவர்களுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை மற்றும் அவர்கள் சென்று வந்த பகுதிகள் விவரங்களை பதிவு செய்து அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story