ஏரல் அரசு ஆஸ்பத்திரியில் கனிமொழி எம்.பி. ஆய்வு - மருத்துவ பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்


ஏரல் அரசு ஆஸ்பத்திரியில் கனிமொழி எம்.பி. ஆய்வு - மருத்துவ பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்
x
தினத்தந்தி 6 April 2020 4:15 AM IST (Updated: 5 April 2020 11:46 PM IST)
t-max-icont-min-icon

ஏரல் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று கனிமொழி எம்.பி. ஆய்வு செய்தார். இதையொட்டி மருத்துவ பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அவர் வழங்கினார்.

ஏரல், 

நாடு முழுவதும் மக்களை பயங்கரமாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சேவை செய்து வருகிறார்கள். தூத்துக்குடி எம்.பி. கனிமொழி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு அரசு ஆஸ்பத்திரிகளுக்கும் நேரில் சென்று அங்குள்ள மருத்துவர்களிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்தியும், மருத்துவ உபகரணங்களையும் வழங்கி வருகிறார்.

இதேபோல் நேற்று காலை ஏரல் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த கனிமொழி எம்.பி. ஆஸ்பத்திரியை பார்வையிட்டு அங்கு பணியில் இருந்த டாக்டர் வள்ளி மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அவர் டாக்டர்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படக்கூடிய மருத்துவ உபகரணங்களையும், மாஸ்க், கையுறை, சானிட்டேசர் ஆகியவற்றையும் வழங்கினார். பின்னர் அரிசி, பருப்பு மற்றும் பழங்கள் உள்ளிட்ட உணவு பொருள்களை ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் ஆஸ்பத்திரி வாகன ஓட்டுநர்களுக்கு அவர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஏரல் நகரப்பஞ்சாயத்து மற்றும் பெருங்குளம் நகரப்பஞ்சாயத்து தூய்மை பணியாளர்களுக்கு கனிமொழி எம்.பி. அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். பெருங்குளம் நகரப்பஞ்சாயத்து அலுவலர் ரமேஷ் பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஸ்ரீவைகுண்டம்

ஸ்ரீவைகுண்டம் நகரப்பஞ்சாயத்தில் பணிபுரியும் 36 தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கனிமொழி எம்.பி. வழங்கினார். செயல் அலுவலர் முருகன், சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் ஆகியோரிடம் முக கவசம், கையுறை மற்றும் கிருமிநாசினி, சோப் அடங்கிய பொருட்களை வழங்கினார். இதனைத்தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள நோயாளிகள் அறையை பார்வையிட்டார். மருத்துவமனை தலைமை மருத்துவர் வெங்கட ரங்கனிடம் முக கவசம், கையுறை மற்றும் கிருமிநாசினி, சோப் அடங்கிய பொருட்களை வழங்கினார். நகரப்பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story