நெல்லை, தூத்துக்குடியில் மேலும் 3 பேருக்கு கொரோனா - சிறுவன் உள்பட 8 பேர் தனிமை வார்டில் அனுமதி


நெல்லை, தூத்துக்குடியில் மேலும் 3 பேருக்கு கொரோனா - சிறுவன் உள்பட 8 பேர் தனிமை வார்டில் அனுமதி
x
தினத்தந்தி 6 April 2020 4:30 AM IST (Updated: 6 April 2020 1:22 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ளவர்களை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டுகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

அதன்படி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த மேலும் 2 பேர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களது ரத்த பரிசோதனை முடிவில், 2 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 11 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுதவிர தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா தனி வார்டில் 9 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இதேபோல், நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில், நேற்று முன்தினம் வரை நெல்லை, தென்காசி, தூத்துக் குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட 39 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 வயது சிறுவன் உள்பட மேலும் 8 பேர் நேற்று நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர் கள், கொரோனா வைரஸ் தனிமை வார்டில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களின் ரத்தம் மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதும், சிறுவன் உள்பட 8 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story