திருப்பூர் சந்தையில் 4 மணி நேரத்தில் 40 டன் மீன்கள் விற்பனை - ஒரு கிலோ கட்லா ரூ.240


திருப்பூர் சந்தையில் 4 மணி நேரத்தில் 40 டன் மீன்கள் விற்பனை - ஒரு கிலோ கட்லா ரூ.240
x
தினத்தந்தி 6 April 2020 3:45 AM IST (Updated: 6 April 2020 2:13 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் நேற்று 4 மணி நேரத்தில் 40 டன் மீன்கள் விற்பனை செய்யப்பட்டது. இதில் ஒரு கிலோ கட்லா மீன் ரூ.240-க்கு விற்கப்பட்டது.

திருப்பூர், 

திருப்பூர் தென்னம்பாளையத்தில் காய்கறி சந்தை, மீன் சந்தை, உழவர் சந்தை ஆகியவை செயல்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக சந்தையில் அதிகளவு பொதுமக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி வெங்காயம், தக்காளி உள்ளிட்ட மொத்த விற்பனை கடைகள் தென்னம்பாளையம் சந்தைக்கு எதிரே உள்ள காலி இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மற்ற நாட்களை விட ஞாயிற்றுக்கிழமை மீன் பிரியர்கள் அதிக அளவு இங்குள்ள மீன் சந்தைக்கு வந்து மீன் வாங்கி செல்வார்கள். ஆனால் தற்போது கடல் மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் மீன் பிரியர்களின் வருகையை கருத்தில் கொண்டு மீன் வியாபாரிகள் மீன் சந்தைக்கு மீன்களை விற்பனைக்கு ஆந்திராவில் இருந்து கொண்டுவந்தனர்.

அதன்படி நேற்று மட்டும் 45 டன் அணை மற்றும் வளர்ப்பு மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதற்கிடையே கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்த மீன் விற்பனை நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் நேற்று காலை 4 மணி வரை மட்டுமே நடைபெற வேண்டும் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இந்த 4 மணி நேரம் மட்டுமே மீன் விற்பனை நடைபெற்றது. இந்த 4 மணி நேரத்தில் 40 டன் மீன்களை மொத்த வியாபாரிகள் வாங்கி சென்றனர். 5 டன் மீன்கள் விற்பனையாகவில்லை.

நேற்று முன்தினத்தை விட நேற்று சில மீன்களின் விலை உயர்வாக இருந்தது. நேற்று ஒரு கிலோ கட்லா மீன் ரூ.240-க்கும், ரோகு ரூ.200-க்கும், மிருகால் ரூ.200-க்கும், நெய்மீன் ரூ.120-க்கும், பாறை மீன் (அணை) ரூ.200, ரூ.240 என 2 பிரிவுகளில் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. நேற்று காலை 4 மணிக்கு பிறகு மீன் சந்தை கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து மூடப்பட்டிருந்தது. இதனால் மீன் வாங்க வந்த மீன் பிரியர்கள் பலரும் ஏமாற்றத்துடன் சென்றார்கள். பின்னர் ஆங்காங்கே செயல்பட்ட மீன் கடைகளில் மீன்களை வாங்கி சென்றார்கள்.

Next Story