பர்கூர் வனப்பகுதியில் தேக்கு மரம் வெட்டி கடத்த முயற்சி; 2 பேர் கைது


பர்கூர் வனப்பகுதியில் தேக்கு மரம் வெட்டி கடத்த முயற்சி; 2 பேர் கைது
x
தினத்தந்தி 5 April 2020 10:15 PM GMT (Updated: 5 April 2020 9:04 PM GMT)

பர்கூர் வனப்பகுதியில் தேக்கு மரம் வெட்டி கடத்த முயன்ற 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

அந்தியூர், 

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைக்கிராமம் ஒரத்திபாளையம் பகுதியில் வனச்சரகர் மணிகண்டன் மற்றும் வனத்துறையினர் நேற்று அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது அங்கு தேக்கு மரம் சுமார் 6 அடி நீளத்தில் 2 துண்டுகளாக வெட்டப்பட்டு கிடந்தது. இதனால் வனத்துறையினர் ஒரு மரத்துக்கு பின்புறம் மறைந்து யாராவது தேக்கு மர துண்டுகளை எடுக்க வருகிறார்களா? என்று கண்காணித்து கொண்டிருந்தனர்.

சிறிது நேரம் கழித்து 2 பேர் அங்கு நைசாக வந்தனர். பின்னர் மரங்களை கடத்துவதற்காக எடுத்துக்கொண்டு இருந்தனர். இதை பார்த்த வனத்துறையினர் அங்கு சென்று கையும் களவுமாக 2 பேரையும் பிடித்தனர். பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் 2 பேரும் பர்கூர் பெஜில்பாளையத்தை சேர்ந்த அழகேசன் (வயது 22), மாதேவன் (52) ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும் நடத்திய விசாரணையில் 2 பேரும் தேக்கு மரங்களை வெட்டி கடத்த முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் மாவட்ட வன அதிகாரி விஸ்மிஜு விஸ்வநாதனிடம் வனத்துறையினர் ஒப்படைத்தனர்.

வன அதிகாரி, அவர்கள் 2 பேருக்கும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் அவர்களிடம் இருந்து தேக்கு மரம் வெட்ட பயன்படுத்தப்பட்ட 2 அரிவாள்கள், 1 கோடாரி, 1 ரம்பம் மற்றும் தேக்கு மர துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story