விருதுநகர் மாவட்டத்தில் மதுபாட்டில் கடத்தலுக்கு துணை போன டாஸ்மாக் அதிகாரி கைது; மேலும் 4 பேர் சிக்கினர்
விருதுநகர் மாவட்டத்தில் மதுபாட்டில்கள் கடத்தலுக்கு துணை போன டாஸ்மாக் அதிகாரி கைது செய்யப்பட்டார். மேலும் 4 பேர் சிக்கினர்.
தாயில்பட்டி,
ஊரடங்கு உத்தரவு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் டாஸ்மாக் கடைகள் பகுதி நேரமாக திறக்கப்படும் என்ற தகவலை அமைச்சர் தங்கமணி மறுத்தார். டாஸ்மாக் கடைகள் மறு உத்தரவு வரும்வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவித்துள்ளார். இதற்கிடையில் தமிழகத்தின் பல பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்படுவதும், கடத்தப்படுவதுமாக சம்பவங்கள் நடந்தன.
இதனால் விருதுநகர் மாவட்டத்திலுள்ள பல டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபாட்டில்கள் திருமண மண்டபங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெறாத வகையில் போலீசாரும் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வெம்பக்கோட்டை அருகே சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனை நடத்தினர். வாகன சோதனையின்போது 612 மதுபாட்டில்களுடன் வந்த கார் பிடிபட்டது. காருடன் மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த கோட்டையூரை சேர்ந்த மகேஷ்(வயது40), காரை ஓட்டி வந்த தங்கப்பாண்டியன்(34), இந்த மதுபாட்டில்களை கடத்த உடந்தையாக இருந்த டாஸ்மாக் கடை கண்காணிப்பாளர் மாணிக்கராஜ்(39) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இவர்கள் தாயில்பட்டி அருகேயுள்ள கோட்டையூர் டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை வாடகை காரில் கொண்டு வந்திருப்பது தெரியவந்தது. கைதான மகேஷ், டாஸ்மாக் கடை அருகே பார் நடத்தியவராவார்.
இதேபோல சிவகாசி அருகேயுள்ள மடத்துப்பட்டியில் இருந்து ஒரு காரில் 624 மதுபாட்டில்கள் கடத்தப்பட்டது. மாரனேரி அருகே போலீசார் வாகன சோதனையின்போது இந்த மதுபாட்டில்கள் சிக்கின. கடத்தப்பட்ட காருடன் மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த மானகசேரியை சேர்ந்த அதிபதி முருகன்(30), விக்னேஷ்வரன்(34) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story