தானேயில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 4 ஆஸ்பத்திரிகள்
தானேயில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க 4 ஆஸ்பத்திரிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மும்பை,
கொரோனாவுக்கு மட்டும் சிகிச்சை அளிக்க பிரத்தியேக ஆஸ்பத்திரிகளை அமைக்குமாறு மாநில முதல்-மந்திரிகளை, பிரதமர் மோடி கேட்டு கொண்டு இருந்தார். இதையடுத்து மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிரத்தியேக ஆஸ்பத்திரிகள் அமைக்கப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியிருந்தார்.
அதன்படி தானேயில் 4 ஆஸ்பத்திரிகள் கொரோனாவுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரிகளாக மாற்றப்பட்டுள்ளன. தானே மாநகராட்சி ஆஸ்பத்திரி, மிரா பயந்தர் பன்டித் பீம்சென் ஜோஷி ஆஸ்பத்திரி, வாஷி பொது ஆஸ்பத்திரி, கல்யாண் - டோம்பிலியில் உள்ள சாஸ்திரி நகர் ஆஸ்பத்திரி ஆகியவற்றில் கொரோனா நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
இந்த ஆஸ்பத்திரிகளில் மொத்தம் 420 படுக்கைகள் உள்ளன. இதுதவிர ராய்காட்டில் 100 படுக்கைகளுடன் ஒரு ஆஸ்பத்திரியும், சிந்துதுர்க்கில் 75 படுக்கைகளுடன் ஒரு ஆஸ்பத்திரியும், ரத்னகிரியில் 150 படுக்கைகளுடன் 2 ஆஸ்பத்திரிகளும் கொரோனா ஆஸ்பத்திரிகளாக மாற்றப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story