தமிழக அரசின் ரூ.1000 நிவாரண தொகை: ஒரே நாளில் 77 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்


தமிழக அரசின் ரூ.1000 நிவாரண தொகை: ஒரே நாளில் 77 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்
x
தினத்தந்தி 6 April 2020 4:15 AM IST (Updated: 6 April 2020 3:51 AM IST)
t-max-icont-min-icon

நேற்று ஒரே நாளில் மட்டும் 77 லட்சம் குடும்பங்களுக்கு நேரடியாக சென்று ரூ.1000 நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை, 

மதுரை மாநகராட்சி சார்பாக மதுரை கல்லூரி மைதானத்தில் தற்காலிக காய்கறி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு வரும் பொதுமக்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் வகையில் கிருமி நாசினி பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதனை கமிஷனர் விசாகன் தலைமையில் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை மாநகராட்சியின் சார்பில் காய்கறி சந்தைகள் ஏறத்தாழ 35 இடங்களில் பரவலாக்கப்பட்டு பொதுமக்கள் அவரவர் பகுதிகளில் சென்று காய்கறிகள் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு வருகை தரும் மக்களின் வசதிக்காக யாவும் இனிதே தொண்டு நிறுவனத்தின் மூலம் கிருமி நாசினி பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது போன்று பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கிருமி நாசினி பாதை அமைக்கப்பட உள்ளது.

விலைவாசியினை கட்டுப்படுத்தும் வகையில் கூட்டுறவு பண்டகசாலையின் மூலம் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. செயற்கையாக உணவுப்பொருட்களை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதல்-அமைச்சர் உத்தரவுப்படி ரேஷன் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க ரூ.1000 ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரில் சென்று வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 77 லட்சம் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 1.23 கோடி குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட உள்ளது.

ரேஷன் கடைகளில் யாரும் தவறு செய்ய முடியாது. எந்த ரேஷன் கடையில் தவறு நடைபெறுகிறது என்று தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு தங்குதடையின்றி ரேஷன் பொருட்கள் கிடைக்கும். யாருக்கேனும் ஒரு பொருள் கிடைக்காவிட்டால் மறுநாளே அந்த பொருளை வாங்கி கொள்ளலாம். பொதுமக்கள் எந்த பொருள் வாங்குகிறார்களோ அந்த பொருள் மட்டும்தான் அங்கு பதிவாகும். ஸ்மார்ட் கார்டுதாரருக்கு எஸ்.எம்.எஸ். வந்துவிடும். எனவே தவறு நடைபெற வாய்ப்பே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் நகர பொறியாளர் அரசு, உதவி கமிஷனர் பழனிச்சாமி, மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன், செயற்பொறியாளர் முருகேசபாண்டியன் உள்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story