ராஜபாளையம் பகுதியில் 50 ஆயிரம் பேருக்கு முக கவசம் - தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்
ராஜபாளையம் பகுதியை சேர்ந்த 50 ஆயிரம் பேருக்கு இலவசமாக முக கவசங்களை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வரும் வருவாய்த்துறை, காவல்துறையினரின் அறிவுரைகளை பொதுமக்கள் முழுமையான அளவில் கடை பிடிக்காத நிலை உள்ளது. கிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் பற்றி அறியாமல் பெரும்பாலான மக்கள் வீதிகளில் பாதுகாப்பு கவசம் இன்றி சுற்றி வருவதையும் பார்க்க முடிகிறது.
இந்த நிலையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வெளியே வரும் கிராம மக்கள் முக கவசம் இன்றி செல்லக் கூடாது என்பதற்காக, தன்னுடைய ஆலையில் குறைந்த அளவு ஊழியர்களை கொண்டு தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் முக கவசங்கள் தயார் செய்து வருகிறார்.
தற்போது வரை தயாரிக்கப்பட்ட 50 ஆயிரம் முக கவசங்களை நகரை சுற்றி உள்ள கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி செட்டியார்பட்டியில் நடைபெற்றது. சேத்தூர், முகவூர், வெங்காநல்லூர், நக்கனேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த தி.மு.க. கிளைஉறுப்பினர்கள் மற்றும் கட்சியினர் மூலம் 50 ஆயிரம் பேருக்கு முக கவசங்களை இலவசமாக வழங்கினார்.
இவற்றின் மதிப்பு ரூ.5லட்சம் என எம்.எல்.ஏ. தெரிவித்தார். மேலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து தினமும் பகல் மற்றும் இரவில் ஏழை, எளிய மக்கள், மனநலம் குன்றியவர்கள் மற்றும் ஆதரவற்றவர்கள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கிளை கழகத்தினர் மூலம் உணவு தயாரித்து இலவசமாக வழங்கப்படுகிறது. உணவு தயாரிக்கும் இடத்தையும் எம்.எல்.ஏ. பார்வையிட்டார். உணவின் தரம் குறித்து சாப்பிட்டு பார்த்து தெரிந்து கொண்டார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஏற்பாட்டில் சாத்தூரில் தற்காலிகமாக காய்கறிகடை இயங்கும் உழவர்சந்தை, சாத்தூர்பஸ்நிலையம் மற்றும் மார்க்கெட் ஆகிய இடங்களில் தி.மு.க. நகர செயலாளர் குருசாமி முக கவசம் வழங்கினார். சாத்தூர் யூனியன் தலைவர் நிர்மலா கடற்கரைராஜ் முன்னிலையில் அரசு மருத்துவமனை டாக்டர் கேசவன் மற்றும் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு இலவச முககவசம் அவர் வழங்கினார்.
அப்போது யூனியன் முன்னாள் தலைவர் கடற்கரைராஜ், தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு அணி அமைப்பாளர் அசோக், துணை அமைப்பாளர் ஞானசேகரன், மாவட்ட ஆதி திராவிட துணை அமைப்பாளர் அன்பழகன், மாவட்ட பிரதிநிதி முருகன், வார்டுபிரதி நிதிகள் பால்பாண்டி, இசக்கிமுத்து, மாரிமுத்து, தகவல்தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் முனீஸ்வரன் மற்றும் இளைஞரணி அமைப்பாளர் சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story