கூட்டுறவுத்துறை சார்பில் கிராமங்கள்தோறும் நடமாடும் காய்கறி விற்பனை
சிவகங்கை மாவட்டத்தில் கிராமங்கள்தோறும் கூட்டுறவுத்துறை சார்பில் வாகனங்கள் மூலம் நடமாடும் காய்கறி விற்பனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சிவகங்கை,
சிவகங்கை நகரில் நகராட்சி நிர்வாகம் மூலம் நேரடியாக வீடுகளுக்கு சென்று பொதுமக்களுக்கு காய்கறிகள் விற்பனை செய்யும் திட்டம் மற்றும் கூட்டுறவுத்துறை மூலம் லாரிகளில் கிராமங்களுக்கு காய்கறி வழங்கும் திட்டம் ஆகியவற்றின் தொடக்க விழா கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில், மானாமதுரை எம்.எல்.ஏ. நாகராஜன் மற்றும் மாவட்ட கூட்டுறவு விற்பனை பண்டகசாலை தலைவர் நாகராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் வரவேற்று பேசினார். அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது:-
நகராட்சி நிர்வாகம் மூலம் நகராட்சிப் பகுதியில் ஒவ்வொரு நாளும் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரூ.100-க்கு 11 வகை காய்கறிகள் விற்பனை செய்யப்பட உள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.
மேலும், கிராமபகுதிகளில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதை தவிர்க்கும் வகையில் கூட்டுறவுத்துறையின் மூலம் பண்ணை பசுமை நடமாடும் காய்கறி விற்பனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் நாள்தோறும் 10 வாகனங்களில் அனைத்து கிராமங்களிலும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய காய்கறிகள் எடுத்துச்சென்று அரசு நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை இணை இயக்குனர் ஆரோக்கிய சுகுமார், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் வெங்கடேசன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அழகுமலை, சிவகங்கை ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளாபாலசந்தர், கூட்டுறவு சங்கத்தலைவர் ஆனந்தன், வட்டாட்சியர் மைலாவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story