திருவள்ளூர் மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி: தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள கலெக்டர் உத்தரவு


திருவள்ளூர் மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி: தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 5 April 2020 10:53 PM GMT (Updated: 5 April 2020 10:53 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதால் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர், 

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 11 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது உறுதியாகி உள்ளது. எனவே இதில் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகளில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கண்காணிப்பு மற்றும் தொற்றுநோய் தடுப்பு குழு அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

சம்பந்தப்பட்ட பகுதியில் 5 கி.மீ. சுற்றளவு கொண்ட பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக எடுத்து கொள்ளப்படுகிறது.

இந்த பகுதிகளில் தீவிர கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிக்குள் நடமாடும் மருத்துவ குழுக்கள், கட்டுப்பாட்டு குழு மூலம் கள ஆய்வு பணி நடைபெறுகிறது.

கட்டுப்பாட்டு பகுதிக்குள் உள்ள மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் மூடப்படும். மக்களுக்கு அங்கு அமைக்கப்பட்டுள்ள நகராட்சி மற்றும் கிராம வார்டு குழுக்கள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யப்படுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குள் இந்த வாரத்தில் எதிர்பார்க்கப்படும் பிரசவ தேதி உள்ள கர்ப்பிணிகள் மற்றும் சிக்கல் உள்ள கர்ப்பிணிகள் அவசர கால ஊர்தி மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவர்.

60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு முக கவசங்கள் வழங்கப்படுகிறது. காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகளும், கடுமையான சுவாச நோய் போன்ற அறிகுறியும் உள்ளவர்கள் தானாக முன்வந்தால் அவர்களுக்கு டாக்டர்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு முக கவசங்கள் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story