ஊரடங்கு உத்தரவால் பாதிப்பு: அமைப்புசாரா தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் - முதல்-மந்திரிக்கு சித்தராமையா கடிதம்
ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டு உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களுரு,
இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா வைரசை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மாநிலத்தில் உற்பத்தி நடவடிக்கைகள் முடங்கிவிட்டன. வீட்டு உபயோக பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், சிறிய, நடுத்தர தொழில்கள் வாழ்வா, சாவா என்ற நிலையில் இருக்கின்றன. இதன் காரணமாக லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து நடுத்தெருவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதில் அமைப்புசாரா தொழிலாளர்கள், உணவு கிடைக்காமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தினசரி கூலித்தொழிலை அடிப்படையாக வைத்து அவர்களின் வாழ்க்கை அமைந்துள்ளது. அத்தகைய தொழிலாளர்களுக்கு உதவ மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூலித்தொழிலாளர்கள் கிடைக்காமல் விவசாயிகள் பெரும் சிக்கலில் உள்ளனர். அவர்களின் நிலையும் மிக மோசமாக உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் அவர்களுக்கு மத்திய-மாநில அரசுகள் உதவ வேண்டும். வீட்டு வேலைக்காரர்கள், சலவை தொழிலாளர்கள், நெசவாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், வாடகை கார் டிரைவர்கள், லாரி டிரைவர்கள், திரைப்பட துறை தொழிலாளர்கள், மீனவர்கள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தங்களின் பிரச்சினைகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த தொழிலாளர்களுக்கு ஒரு சிறப்பு தொகுப்பு திட்டத்தை மாநில அரசு அறிவிக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நாட்களுக்கு அந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைக்க சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் மாநில அரசு பேச வேண்டும். மத்திய, மாநில அரசுகள், மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். குறிப்பாக கர்நாடக அரசு மனிதநேயத்துடன் செயல்பட்டு அமைப்புசாரா தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா அதில் குறிப்பிட்டு உள்ளார்.
Related Tags :
Next Story