வாலிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்த்த பொதுமக்கள்


வாலிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்த்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 6 April 2020 3:45 AM IST (Updated: 6 April 2020 8:45 AM IST)
t-max-icont-min-icon

வாலிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வருவதை தவிர்த்தனர்.

பெரம்பலூர்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட பின்னர் பெரம்பலூர் மாவட்டத்தில் சில நாட்கள் பொதுமக்கள் வெளியே செல்வது குறைவாக இருந்தது. பின்னர் மாவட்ட பகுதிகளில் தேவையில்லாமல் பலர் வீட்டை விட்டு வெளியே சுற்றித்திரிந்ததால் சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருந்தது. இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை முழுமையாக அமல்படுத்த முடியாமல் போலீசார் திணறி வந்தனர்.

இதுவரை வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு வந்த சுமார் 1,835 பேரை, அவரவர் வீடுகளில் மருத்துவக்குழுவினர் தனிமைப்படுத்தி தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்கவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் பெரம்பலூர் மாவட்டத்தில் வாலிபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும் நேற்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்த நபர்களை மட்டும் போலீசார் அனுமதித்தனர். அந்த நேரத்தில் தேவையில்லாமல் சாலையில் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை மடக்கி பிடித்த போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களுடைய வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதில் சிலரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடு பட்டனர்.

இருப்பினும் பெரும் பாலான பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவில்லை. மதியம் 1 மணிக்கு பிறகு சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. இதேபோல் வருகிற 14-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் முழுமையாக கடைபிடித்தால் பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுத்திடலாம் என்று அரசு அதிகாரிகள், போலீசார், சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Next Story