ஊரடங்கு உத்தரவால் அரியலூர் மாவட்டத்தில் ஊமையான தறிகள் - 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வாழ்வாதாரம் இழந்தனர்
ஊரடங்கு உத்தரவால் அரியலூர் மாவட்டத்தில் கைத்தறி நெசவு செய்ய முடியாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களில் 300-க்கும் மேற்பட்டோர் நெசவு தொழிலை பிரதானமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் கைத்தறிகள் மூலம் பட்டுப்புடவை உள்ளிட்டவற்றை நெய்து, மொத்த வியாபாரிகளிடம் கொடுத்து, அதற்கான கூலியை பெறுவது வழக்கம். இதற்காக அவர்கள் உட்கோட்டை, உதயநத்தம், கும்பகோணம், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மொத்த வியாபாரிகளிடம் இருந்து பட்டுப்புடவைகளை நெய்வதற்கான நூல்களை வாங்கி வந்து, அவற்றை நெய்து கொடுப்பார்கள்.
இந்த நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் நெசவாளர்கள் உட்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று நூல் போன்றவற்றை வாங்கி வர முடியாததாலும், நெய்த பட்டுப்புடவைகளை அங்கு கொண்டு செல்ல முடியாததாலும் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதனால் பட்டுப்புடவைகள் போன்றவற்றை நெய்யும்போது சத்தத்துடன் காணப்படும் கைத்தறிகள் தற்போது ஊமையாகியுள்ளன.
இதேபோல் சின்னவளையம், செங்குந்தபுரம், வாரியங்காவல், இலையூர், மருதூர், பொன்பரப்பி, ஆண்டிமடம் உள்ளிட்ட கிராமங்களிலும் நெசவுத்தொழிலாளர்கள் நெசவு செய்ய முடியாத நிலையில் உள்ளனர். அரியலூர் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.
வேலையில்லாத நிலையில் தங்கள் குடும்பத்திற்கான அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க பணம் இல்லாத நிலை ஏற்பட்டிருப்பது வேதனையளிப்பதாக நெசவாளர்கள் தெரிவித்தனர். தமிழக அரசு வழங்கிய ஆயிரம் ரூபாய், ஊரடங்கு உத்தரவு காலம் முழுவதற்கும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு போதுமானதாக இல்லை. எனவே நெசவுத்தொழிலாளர்களுக்காக ஒரு மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் நிவாரண தொகையாக வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story