டெல்லி மாநாட்டில் பங்கேற்ற தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மேலும் 4 பேருக்கு கொரோனா
தஞ்சை மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் ஆவர்.
தஞ்சாவூர்,
கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த 42 வயதான நபருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேற்கிந்திய தீவில் இருந்து வந்த அவர், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு நடந்த 2-வது கட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து 3-வது கட்ட பரிசோதனைக்கு சளி மற்றும் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக திருவாரூருக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளது.
இந்த நிலையில், டெல்லி மாநாட்டில் பங்கேற்று தஞ்சை மாவட்டத்துக்கு திரும்பிய இந்தோனேஷியா, வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள், தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என மொத்தம் 77 பேர் கண்டறியப்பட்டு, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களுக்கு ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டு, திருவாரூர் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில், 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 3 பேர் கும்பகோணத்தை சேர்ந்தவர்கள். இவர்களை தவிர திருவையாறு அருகே மேலதிருப்பூந்துருத்தியை சேர்ந்த 62 வயதானவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து மேலதிருப்பூந்துருத்தி மற்றும் கும்பகோணத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் புது சாலை, மடத்து தெரு, அண்ணலக்ரஹாரம் பகுதிகள் ‘சீல்’ வைக்கப்பட்டது. அந்த பகுதிகளில் உள்ள தெரு வாயில்களில் போலீசார் தடுப்புகள் அமைத்து நேற்று மாலை மூடினர். அந்த பகுதியில் உள்ளவர்கள் வெளியே வர முடியாத அளவுக்கும், வெளிப்பகுதியை சேர்ந்தவர்கள் அந்த பகுதிக்குள் செல்லாதவாறும் அடைக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று வரையில் தொடர் காய்ச்சல், சளி, இருமலால் பாதிக்கப்பட்ட 99 ஆண்கள், 18 பெண்கள், ஒரு பெண் குழந்தை என மொத்தம் 118 பேர் சிறப்புப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Related Tags :
Next Story