டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதுபான பாட்டில்கள் திருட்டு
டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுவிட்டன. அங்கு பணியாற்றியவர்களுக்கும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை திண்டுக்கல் சத்திரம் தெருவில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்தது.
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் டாஸ்மாக் கடை பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் கடைக்குள் சென்று பார்த்தனர். அப்போது கடையில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் மற்றும் கடையின் முன்பு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் திருடு போய் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து திண்டுக்கல் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஊரடங்கு காரணமாக வீட்டைவிட்டு அவர்கள் வெளியே வரவில்லை என்பதும், அதன் காரணமாக டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்து சென்றவர்களை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் யாரும் பார்க்கவில்லை என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.
இதனால் கொள்ளையர்கள் குறித்த எந்த துப்பும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. அதன் பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். பின்னர் டாஸ்மாக் கடை பணியாளர்களிடம் போலீசார் விசாரித்த போது கடையில் இருந்த மதுபாட்டில்கள், கண்காணிப்பு கேமராக்கள் மட்டும் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு மதுபானங்களை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story