கடலூரில், இறைச்சி கடைக்கு ‘சீல்’ வைப்பு - தடையை மீறி விற்பனை செய்த 3 பேர் கைது
கடலூர் மஞ்சக்குப்பத்தில் இறைச்சி கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் தடையை மீறி விற்பனை செய்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் 5 நகராட்சிகள் மற்றும் 16 பேரூராட்சிகளில் வருகிற 14-ந்தேதி வரை இறைச்சி விற்பனைக்கு தடை செய்யப்படுவதாகவும் இந்த தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதனையடுத்து கடலூர் நகராட்சி ஆணையர் ராமமூர்த்தி உத்தரவின் பேரில் துப்புரவு ஆய்வாளர் சிவா, நகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் சக்திவேல், ஹரிகுமார் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் கடலூர் நகராட்சி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட்டில் இறைச்சி கடை திறந்து இருப்பதை பார்த்தனர். இதையடுத்து அதிகாரிகள் அந்த கடையை பூட்டி சீல் வைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த கடலூர் புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் தடையை மீறி இறைச்சி வியாபாரம் செய்த மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 52) என்பவரை கைது செய்தனர். அதேபோல் மஞ்சக்குப்பம் தனவள்ளி நகரில் வீட்டு வளாகத்தில் இறைச்சி விற்பனை செய்ததாக மஞ்சக்குப்பம் வேணுகோபாலபுரத்தை சேர்ந்த மஜிநுதின்(55), இவருடைய மகன் முகம்மது ஷரீப் (28) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story