விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி
விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
விழுப்புரம்,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் டெல்லி நிஜாமுதீன் நகரில் கடந்த மாதம் 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியவர்கள் என தெரியவந்துள்ளது.
இதையடுத்து இந்நோயை தடுக்கும் விதமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பியவர்களின் விவரங்களை சேகரித்து அவர்கள் யார், யார்? என கண்டறிந்து அவர்களை அரசு மருத்துவமனைகளில் தனி வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 72 பேர் கண்டறியப்பட்டு அவர்கள் விழுப்புரம் நகரில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை மற்றும் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுடைய ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக சென்னை கிண்டியில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இவர்களில் விழுப்புரம் நகரத்தை சேர்ந்த 7 பேருக்கும் மற்றும் விக்கிரவாண்டி, வளவனூர், கோட்டக்குப்பம் ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா ஒருவருக்கும் என மொத்தம் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் காலை சிகிச்சை பலனின்றி விழுப்புரத்தை சேர்ந்த அரசு பள்ளி தலைமையாசிரியர் இறந்தார்.
இந்நிலையில் நேற்று சென்னையில் உள்ள ஆய்வகத்தில் இருந்து சிலரின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் கிடைக்கப்பெற்றது. இதில் விழுப்புரம் நகரத்தை சேர்ந்த 4 பேருக்கும், செஞ்சி பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் என மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 5 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை மருத்துவ குழுவினர் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்களோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி கொரோனா அறிகுறி காணப்பட்ட 63 பேர் கடலூர், சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 8 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் டெல்லி மாநாடு சென்று திரும்பியவர்கள் ஆவர். மேலும் 48 பேரின் பரிசோதனை முடிவுகள் இரண்டு நாட்களில் வரும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் டெல்லி மாநாடு சென்று திரும்பிய மேலும் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பொதுசுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்டத்தில் கொரோனா அறிகுறிகளுடன் கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 14 பேரின் மருத்துவ பரிசோதனை அறிக்கை நேற்று வந்துள்ளது. இதில் 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 பேருக்கு கொரோனா இல்லை எனவும் தெரியவந்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள ஒரு பெண் உள்பட 5 பேரும் டெல்லி மாநாடு சென்று திரும்பியவர்கள் ஆவர். இவர்களில் 2 பேர் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையை சேர்ந்தவர்கள், 2 பேர் ஆயங்குடி மற்றும் ஒருவர் பண்ருட்டி அருகே உள்ள கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி மாநாடு சென்று திரும்பிய 41 பேர் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 38 பேரின் மருத்துவ பரிசோதனை அறிக்கை வந்துள்ளது. இதில் 13 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 25 பேருக்கு கொரோனா இல்லை என தெரிய வந்துள்ளது. இன்னும் 3 பேரின் மருத்துவ பரிசோதனை அறிக்கை வரவேண்டியுள்ளது.
விருத்தாசலம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா அறிகுறி, கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 64 பேர் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 29 பேர் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையிலும், 35 பேர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், ஒருவர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story