களியக்காவிளையில், குடோனில் பதுக்கி வைத்த ரூ.1 கோடி புகையிலை பொருட்கள் பறிமுதல் - 5 பேர் கைது


களியக்காவிளையில், குடோனில் பதுக்கி வைத்த ரூ.1 கோடி புகையிலை பொருட்கள் பறிமுதல் - 5 பேர் கைது
x
தினத்தந்தி 5 April 2020 10:30 PM GMT (Updated: 6 April 2020 3:46 AM GMT)

களியக்காவிளை குடோனில் பதுக்கி வைத்த ரூ.1 கோடி மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

களியக்காவிளை,

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மதுவை கைவிட முடியாத மதுபிரியர்கள் அல்லோலப்பட்டு வருகின்றனர். சிலர் மது கிடைக்காத விரக்தியில் தங்களுடைய உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவமும் நடந்து வருகிறது.

அதே சமயத்தில், புகையிலை பொருட்களை விரும்பும் நபர்கள் உற்சாகமாக இருந்து வந்ததாக தெரிகிறது. ஏனெனில் சில கடைகளில் புகையிலை பொருட்கள் தாராளமாக கிடைத்துள்ளது. இந்த நிலையில் கேரள-குமரி எல்லையான களியக்காவிளை பகுதியில் உள்ள ஒரு குடோனில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் களியக்காவிளையில் உள்ள ஒரு குடோனுக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அங்கு புகையிலை பொருட்கள் மூடை, மூடையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். இதுதொடர்பாக களியக்காவிளையை சேர்ந்த ரசாக் (வயது 38), முகமது ரஷீத் (50), பாறசாலை ஷாபி (37), அஸ்ரப் (40), ஹகீன் முகமது (32) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், கேரளா, தமிழகம் ஆகிய இடங்களுக்கு களியக்காவிளையில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி சென்று விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை பல வருடமாக இவர்கள் செய்து வந்துள்ளனர்.

தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், புகையிலை பொருட்களுக்கு மவுசு அதிகமாக இருந்தது. மது தான் கிடைக்கவில்லை, கடைகளில் வாங்கி புகையிலை பொருட்களையாவது சாப்பிடுவோம் என்ற மனநிலைக்கு மதுபிரியர்கள் சிலர் மாறியதை அறிந்த இவர்கள், அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் காய்கறி வாகனம் மூலமாக தற்போது புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து கடத்தி உள்ளனர்.

இந்த நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இந்த 5 பேரும் மாட்டிக் கொண்டது தெரிய வந்தது. களியக்காவிளை குடோனில் ரூ.1 கோடி மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story