கருமந்துறை மலைப்பகுதியில் காரில் சாராயம் கடத்திய அ.ம.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் கைது
கருமந்துறை வனப்பகுதியில் காரில் சாராயம் கடத்திய அ.ம.மு.க. பிரமுகர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பெத்தநாயக்கன்பாளையம்,
பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள கருமந்துறை மலைப்பகுதியில் சாராயம் கடத்துவதாக வாழப்பாடி போலீஸ் சூப்பிரண்டு சூர்யமூர்த்திக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து ஏத்தாப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சதீஷ், கென்னடி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கருமந்துறை மலைப்பகுதியில் இருந்து அ.ம.மு.க. கட்சிக்கொடி கட்டியபடி ஒரு கார் வந்தது. அந்த காரை போலீசார் நிறுத்தி சோதனை செய்த போது, அதில் 250 லிட்டர் சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் காரில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் தாண்டவராயபுரம் பகுதியை சேர்ந்த அ.ம.மு.க. ஊராட்சி செயலாளர் ராஜா என்கிற ராஜ்குமார் (வயது 31), கண்ணன் (27), கருமந்துறை மணியார் குண்டம் பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் (25) என்பதும், இவர்கள் கருமந்துறை மலைப்பகுதியில் இருந்து தாண்டவராயபுரம் பகுதியில் விற்பனை செய்வதற்காக பாக்கெட்டுகளில் அடைத்து சாராயத்தை கடத்திச்சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அ.ம.மு.க. பிரமுகர் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 250 லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story