நாமக்கல்லில் இறைச்சி கடைகள் மூடப்பட்டன: காய்கறி வாங்க அலைமோதிய பொதுமக்கள் கூட்டம் - சுரங்கப்பாதை மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது
நாமக்கல்லில் நேற்று இறைச்சி கடைகள் மூடப்பட்டதால், உழவர் சந்தை மற்றும் சாலையோர காய்கறி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காய்கறி வாங்க வந்த நபர்கள் சுரங்கப்பாதை மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
நாமக்கல்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் கடந்த 24-ந் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளதால் சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன.
இதற்கிடையே கொரோனா வைரசை கட்டுப்படுத்த அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் மருந்து கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட கடைகள் முன்பு ஒரு மீட்டர் இடைவெளியில் கட்டங்கள் போடப்பட்டு உள்ளன.
நாமக்கல் நகரை பொறுத்த வரையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உழவர்சந்தை மூடப்பட்டு உள்ளது. அதில் செயல்பட்டு வந்த கடைகள் பூங்கா சாலையில் இயங்கி வந்தன. இதேபோல் தினசரி சந்தை கடைகள் பஸ்நிலையத்தில் செயல்பட்டு வந்தன. இங்கு காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் சமூக விலகலை முறையாக கடைபிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து உழவர்சந்தை காய்கறி கடைகள் நாமக்கல் தெற்கு மற்றும் வடக்கு அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகங்களுக்கும், தினசரி சந்தை கடைகள் முல்லைநகர் உள்ளிட்ட 6 இடங்களுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டன.
இந்த நிலையில் கடந்த வாரம் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் சமூக விலகல் முறையாக கடைபிடிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய 2 நாட்கள் நாமக்கல் மாவட்டம் முழுவதும் இறைச்சி மற்றும் மீன்கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டது. எனவே கடந்த 2 நாட்களாக இறைச்சி மற்றும் மீன் கடைகள் மூடப்பட்டன.
இதனால் நேற்று காய்கறி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இவர்கள் சமூக விலகலை கடைபிடிக்க கட்டங்கள் போடப்பட்டு இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் பொதுமக்கள் அதை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று காய்கறிகள் வாங்குவதை பார்க்க முடிந்தது. அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தியவாறு இருந்தனர்.
குறிப்பாக நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காய்கறி வாங்க வரும் நபர்களுக்கு சுரங்கப்பாதை மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் வரை காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை இயங்கி வந்தன. ஆனால் தமிழக அரசின் உத்தரவின் பேரில் நேற்று மதியம் 1 மணிக்கே காய்கறி, மளிகை கடைகளும், பெட்ரோல் விற்பனை நிலையங்களும் மூடப்பட்டன. இதனால் 1 மணிக்கு பிறகு நாமக்கல் நகர் அமைதியாக காணப்பட்டது.
முன்னதாக நகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அத்தியாவசிய பொருட்கள் வாங்க இருசக்கர வாகனங்களில் வந்தோரை முககவசம் அணிந்து செல்லுமாறும், அடிக்கடி வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் எச்சரிக்கை செய்து அனுப்பினர்.
Related Tags :
Next Story