அரூர் பகுதியில், தர்பூசணி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
ஊரடங்கு உத்தரவு காரணமாக அரூர் பகுதியில் தர்பூசணி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அரூர்,
தர்மபுரி மாவட்டம் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், இருமத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 700 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தர்பூசணியை சாகுபடி செய்து வருகின்றனர். சில ஆண்டுகளாக வறட்சியின் பிடியில் சிக்கித்தவித்த தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு, வடகிழக்கு பருவமழை ஓரளவுக்கு கைகொடுத்ததால் விவசாயிகள் பரவலாக தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர்.
இதனிடையே அறுவடை செய்த தர்பூசணியை விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் வாங்கி, லாரிகளில் ஏற்றி சென்று, கோவை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் விற்பனை செய்து வந்தனர். தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் வியாபாரிகள் யாரும் தர்பூசணியை வாங்க முன்வரவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் அதனை பறிக்காமல் செடியிலேயே விட்டு உள்ளனர். ஒரு சில விவசாயிகள் தர்பூசணியை அறுவடை செய்து வாகனங்களில் ஏற்றி அருகிலுள்ள கிராமங்களுக்கு எடுத்துச் சென்று ஒரு கிலோ ரூ.8 முதல் 10 ரூபாய்க்கு கூவி கூவி விற்பனை செய்கின்றனர். விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அரூர் பகுதியில் சாகுபடி செய்துள்ள தர்பூசணியை வாங்க வியாபாரிகள் வராததால் அவற்றை விற்பனை செய்ய முடியவில்லை. இதன்காரணமாக பல விவசாயிகள் தோட்டத்திலேயே தர்பூசணியை விட்டு வருகின்றனர். ஒரு சிலர் வாகனங்களில் ஏற்றி சென்று கிராமம் தோறும் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகிறோம். ஊரடங்கு உத்தரவால் செடிகளிலேயே பறிக்காமல் காயும் தர்பூசணி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story